இலங்கை அரை இறுதிக்கு தகுதி

Written by vinni   // April 1, 2014   //

srilanka_paksitan_asiancup_final_021வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்டகாங்கில் நேற்று இரவு நடந்த ‘சூப்பர்-10’ சுற்று லீக்கின் முக்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் (குரூப்-1) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் நேற்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கேப்டன் பொறுப்பை கவனித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19.2 ஓவர்களில் 119 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மஹேலா ஜெயவர்த்தனே 25 ரன்னும், திரிமன்னே 20 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட், நீஷம் தலா 3 விக்கெட்டும், மெக்லகன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கனே வில்லியம்சன் (42 ரன்கள்) தவிர மற்றவர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். ரங்கனா ஹெராத் தனது அபாரமான சுழற்பந்து வீச்சின் மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்ததுடன் முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

இலங்கை அணியின் நேர்த்தியான பீல்டிங்கினால் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன்-அவுட் ஆனார்கள். நியூசிலாந்து அணி 15.3 ஓவர்களில் 60 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 வெற்றியுடன் குரூப்1-ல் முதலிடம் பிடித்த இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறியது. 3.3 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் ஓவருடன் 3 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்த இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் இது 3-வது சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு முன்பு இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக் கெட்டும், 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டும் சாய்த்து சாதனை படைத்துள்ளார்.


Similar posts

Comments are closed.