வெஸ்ட்இண்டீஸ்-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

Written by vinni   // April 1, 2014   //

west_indies_win_t20_00520 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடை பெற்று வருகிறது.

கடந்த 16–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் தகுதி சுற்று முடிவில் வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்றுக்கு நுழைந்தன.

கடந்த 21–ந்தேதி தொடங்கிய ‘சூப்பர் 10’ சுற்றில் 10 அணிகள் விளையாடின. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘குரூப் 1’ பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளும்,

‘குரூப் 2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றன.

‘சூப்பர் 10’ சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இன்றுடன் ‘சூப்பர் 10’ சுற்று ஆட்டம் முடிகிறது.

‘குரூப் 1’ பிரிவில் நேற்றுடன் ‘லீக்’ ஆட்டம் முடிந்தது. இலங்கை அணி 59 ரன்னில் நியூசிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து 45 ரன்னில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது.

இந்த பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா தலா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் (+2.233) இலங்கை முதல் இடத்தையும், தென்ஆப்பிரிக்கா (+0.07) இரண்டாவது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

நியூசிலாந்து (4 புள்ளி), இங்கிலாந்து (2 புள்ளி), நெதர்லாந்து (2 புள்ளி) வெளியேற்றப்பட்டன.

‘குரூப் 2’ பிரிவில் 2007–ம் ஆண்டு சாம்பியனான இந்தியா 4 ஆட்டத்தில் வென்று 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. இன்று நடைபெறும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தான்– வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெல்லும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் வாய்ப்பை இழந்துவிட்டதால் இன்று மோதும் ஆட்டத்தால் எந்த பலனும் இல்லை. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும்.

குரூப் 2 பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி அரை இறுதியில் ‘குரூப் 1’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்த தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 4–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இலங்கை அணியுடன் அரை இறுதியில் மோதும் அணி வெஸ்ட்இண்டீசா? பாகிஸ்தானா? என்பது இன்று இரவு தெரியும்.

அரை இறுதியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.