தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டடை நாய்கள் – டக்ளஸ்

Written by vinni   // March 31, 2014   //

Douglas-Devanandaஎமது பகுதியின் அபிவிருத்தியையும் மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டையும் முன்னெடுக்க முடியாதவாறு வைக்கோல் பட்டடை நாயாக இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே குழப்பி வருகின்றனர் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கைவேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை முறைமைக்கு ஊடாகவே அரசியல் உள்ளிட்ட எமது மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வினைக் காண முடியும்.

எமது மக்கள் வாழ்வியல் எழுச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் அபிவிருத்தி அடைந்த ஒர் உயரிய சமூகமாக மேலும் நிமிர வேண்டுமென்பதுடன், எவரிடமும் எதற்கும் கையேந்தி நிற்கும் வாழ்க்கை முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டமே சிறந்தது என இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்து நாம் வலியுறுத்தி வந்தபோதிலும், அது காலம் கடந்தது, உழுத்துப் போனது, ஒன்றுக்கும் உதவாதது, அரைகுறையானது என்று கூறியவர்கள் இன்று அதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

வடமாகாணசபை ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளின் உட்கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும்.

ஆனால், குறித்த அபிவிருத்தி செயற்திட்டங்களை கிடைக்கப் பெற்ற மாகாணசபையூடாக முன்னெடுக்க முடியாமலும், செயற்படுத்த முடியாமலும், பல்வேறுபட்ட நொண்டிச் சாட்டுக்களை கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டடை நாயாக தாமும் செய்யாமல், மற்றவர்களையும் செய்ய விடாது தடுத்து வருகின்றனர்.

1987 ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அப்போதைய தமிழ் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருந்தால் எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரையான அழிவுகளை சந்திருக்க மாட்டார்கள்.

இணக்க அரசியல் ஊடாக எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட அதிகாரங்களை பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் ஏதுமில்லையென்பதை நான் திடமாகக் கூறுவேன்.


Similar posts

Comments are closed.