இந்தியாவின் அதிரடியில் சுருண்டது அவுஸ்திரேலியா!

Written by vinni   // March 31, 2014   //

australia_vs_india_28_001அஸ்வினின் பந்துவீச்சு, யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டத்தின் துணையுடன், அவுஸ்திரேலியாவை 73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் 160 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் சார்பாக மேக்ஸ்வல் 23 ஓட்டங்களையும், வார்னர் 19 ஓட்டங்களையும், ஹாட்ஜ் 13 ஓட்டங்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ஓட்டங்களை எடுத்தனர்.

இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 3.2 ஒவர்களில் 11 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்குமார், மோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியனர்.

மிர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இந்தியாவுக்கு வழங்கியது.

துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரஹானேவும் கோஹ்லியும் நிதானத்தைக் கடைப்பிடித்தனர்.

ரஹானே 19 ஓட்டங்களிலும், விராட் கோஹ்லி 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், யுவராஜ் சிங் மீண்டும் ஃபார்முக்கு வந்தவராக, அவுஸ்திரேலிய பந்துவீச்சை விளாசினார். அவர் 43 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

ரெய்னா 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, யுவராஜுக்கு மறுமுனையில் உறுதுணையாக இருந்த அணித்தலைவர் தோனி 24 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது.

அவுஸ்திரேலிய தரப்பில் ஹாட்ஜ், மேக்ஸ்வல், ஸ்டார்க், வாட்சன், பொலிஞ்சர் மற்றும் மியூர்ஹெட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், சூப்பர் 10 சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வசப்படுத்தியது. இந்தியா ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.