பீரிஸ் கொடுத்த பொல்லைக் கொண்டு அரசாங்கத்தை திருப்பி அடித்தது ஐதேக

Written by vinni   // March 31, 2014   //

UNP8712ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை 24 நாடுகள் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் காட்டிய கணக்கை வைத்து, மாகாணசபைத் தேர்தலில் 75 வீதமான மக்கள் ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதாக, பதிலடி கொடுத்துள்ளது எதிர்க்கட்சியான ஐதேக.

ஜெனிவா தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன.

சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கிய 12 நாடுகளையும், நடுநிலை வகித்த 12 நாடுகளையும் சேர்த்து, தீர்மானத்தை 24 நாடுகள் எதிர்ப்பதாக கணக்கு காட்டியிருந்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

அவரது அந்தக் கணக்கை வைத்தே, தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சிக்கு வெறும் 25 வீத ஆதரவு மட்டுமே இருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைமைத்துவ சபையின் பேச்சாளருமான கபீர் ஹாசிம்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் காட்டும் கணக்கின்படி, இந்த தேர்தலில் 75 வீதமான மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்.

40 வீதத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரித்துள்ளனர். 35 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை.

எனவே 75 வீதமான மக்கள் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர் என்று கொள்ளலாம்.

இந்தத் தேர்தல் முடிவு ஆட்சிமாற்றத்துக்கு பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க – ஐதேக தயாராக உள்ளது.

எந்தக்கட்சியுடனும் இதுபற்றிப் பேசத் தயார்” என்று அறிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.