வன்னியில் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பல வறிய மாணவச் சிறார்கள்!

Written by vinni   // March 30, 2014   //

vanni-600x377-450x282யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிப்யில் வாழ்கின்ற மாணவச் சிறார்கள் பலர் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள். பல மாணவர்கள் போசாக்கான உணவின்றி அடிக்கடி பாடசாலைகளில் மயக்கமடைகின்றார்கள். இது பற்றிய செய்திகள் உள்ளூர்ப் பத்திரிகைளில் வெளிவருகின்றன.

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயது மாணவன் ஒருவனை சப்பாத்து அணிந்து பாடசாலைக்கு வருமாறு வகுப்பாசிரியரால் கூறப்பட்ட போது அதற்கு அந்த 7 வயது மாணவச் சிறுவன் கூறியதாவது,

ரீச்சர் சப்பாத்து வாங்குவதற்கு இப்ப எங்களிடம் பணம் இல்லை. எங்கட வீட்டில நிக்கிற ஆட்டுக்குட்டி வளரட்டும், வளர்ந்ததன் பின் அதனை விற்றுப்போட்டு சப்பாத்து வாங்கிப் போடுறன். கொஞ்ச நாளைக்குக் பொறுங்கோ ரீச்சர் ” என்று, அதன் பின்னர்தான் ரீச்சருக்கே அந்த மாணவனின் கஷ்டநிலை பற்றித் தெரியவந்தது.

இதேபோன்று வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவச் சிறுமி ஒருத்தி பாடசாலையில் வழங்கப்படும் மதிய உணவைத் தான் சாப்பிடாமல் அப்படியே வாங்கி தினமும் வீட்டிற்குக் கொண்டு செல்வது வழக்கம். இதனை அறிந்த அப்பாடசாலை ஆசிரியர் அந்த மாணவச் சிறுமியை அணுகி விசாரித்த போது அச்சிறுமி கூறியதாவது,

எங்கட வீட்டில என்னை விட இன்னும் இரண்டு அக்காக்கள் சாப்பாடு இன்றி, நான் கொண்டுபோகும் சாப்பாட்டை எதிர்பார்த்துப் பசியோடு இருப்பார்கள் சேர். நான் இங்கு தாற சாப்பாட்டைக் கொண்டுபோய் அவர்களுக்கும் கொடுத்துச் சாப்பிடுறனான். என்ர அக்கக்கள் அங்க பசியோட இருக்க என்னால இந்தச் சாப்பாட்டைச் சாப்பிட முடியாது.

எப்ப பாடசாலை விடும் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறனான். நான் ஏதாவது பிழை செய்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ சேர். எனக்கும் படிக்க ஆசைதான் எங்கட பசிதான் என்னை படிக்க விடாதாம் என்று கூறிக் கண்ணீர்விட்டுக் கலங்கியுள்ளாள் அந்தச் சிறுமி.

இதேபோல பல சிறார்கள் கஷ்டப்பட்டுக் கலங்கித் தவிக்கின்றார்கள்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிகளில் பல மாணவர்கள் வறுமை காரணமாக ஒருவேளை உணவுக்கே வழியின்றி கவனிப்பார் யாருமின்றி கலங்கி நிற்கின்றார்கள் இவர்களுக்கு உதவ யார்தான் முன்வருவாரகள்?


Similar posts

Comments are closed.