சக்கரத்தில் கோளாறு: 49 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய பிரேசில் விமானம்

Written by vinni   // March 29, 2014   //

planeபிரேசிலின் பிராந்திய விமான சேவைகளில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நிறுவனம் ஏவியங்கா பிரேசில் ஆகும். ஜெர்மனியைச் சேர்ந்த எப்ரோமொவிச் என்ற விமானத் தொழிலதிபரின் கட்டுப்பாட்டில் உள்ள சினர்ஜி நிறுவனத்துக்கு இந்த விமான நிறுவனம் சொந்தமானது.

இவர் மேலும் கொலம்பியன் விமான நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் முன்னணி நிறுவனமான ஏவியங்கா டாகாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. பிரேசில் நிறுவனத்துக்குச் சொந்தமான போக்கர் 100 என்ற ஜெட் விமானம் 49 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடனும் நேற்று பிரேசிலியா விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமானது. அப்போது முன்சக்கரங்கள் வெளிவராததைக் கண்டறிந்த விமானி தகவலை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவித்து அவசர இறக்கத்திற்கு அனுமதி கேட்டார்.

இதனைத் தொடர்ந்து அவ்வாறு இறங்கும்போது ஏற்படும் உராய்வால் தீப்பிடிக்காமல் இருப்பதற்கான திரவத்தை விமானத்தின் மேல் ஊழியர்கள் தெளித்தனர். பின்னர் விமானத்திலிருந்த எரிபொருளைக் குறைப்பதற்காக வானத்தில் சிலமுறை வட்டமடித்த விமானி முதலில் விமானத்தின் பின் சக்கரங்களைத் தரையில் இறக்கி அதன் பின் முன்பகுதியை எந்தவித சேதமும் இல்லாமல் கீழிறக்கினார்.

வெளியில் அவசர உதவிக்கான அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு இதற்கு வசதியாக ஒரு ஓடுபாதையும் மூடப்பட்டது. பின்னர் எந்தவித சிரமமுமின்றி அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்நாட்டின் நான்காவது பெரிய விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துகளை சிறிது நேரம் தாமதப்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.