நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம்

Written by vinni   // March 29, 2014   //

UNP8712நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கம் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசியல் காரணத்திற்காக அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டின் நன்மதிப்பையும் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை சவால்களை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டிருந்தார் எனவும், மாகாணசபை தேர்தலையே இலக்கு வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அறிந்து கொண்டே அரசாங்கம் தேர்தல் தினத்தை நிர்ணயித்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்தமை போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை சீண்டி, பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகிப்போரின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் பிரதான எதிரி அமெரிக்கா என்றால், ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் முக்கிய தலைவர்கள் ஏன் அமெரிக்க குடியுரிமையை பேணி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசப்பற்றாளர்கள் என தங்களை பெருமிதப்படுத்திக் கொள்ளும் குறித்த தலைவர்கள் முடிந்தால் அமெரிக்க குடியுரிமையை துறக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான வெறுப்பை நாளைய தேர்தலில் காட்டுமாறு அரசாங்கம் கோருகின்ற போதிலும், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அழுத்தங்கள் பிரச்சினைகளினால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.