ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கிறோம்! இந்தியா நடுநிலை வகித்தமை மகிழ்ச்சி! ஜனாதிபதி

Written by vinni   // March 29, 2014   //

un_ge_27_03_2014_5ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக எ.எவ்.பி. செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தான் எங்கள் நாட்டுக்கே உரித்தான நல்லிணக்கப்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகவும் அறிவித்தார்.

நாம் இந்தப் பிரேரணையை நிராகரிக்கிறோம். இது எங்கள் நாட்டின் நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு தீங்கிழைக்கின்றது. இப்பிரேரணை எவ்வகையிலும் எமக்கு உதவப் போவதில்லை என்று ஜனாதிபதி பிரான்ஸ் தேசத்து செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் குறித்து நான் மனத்தைரியத்தை இழக்கவில்லை. நான் ஆரம்பித்த நல்லிணக்கப்பாட்டு செயற்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்த செய்தி சேவைக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு ள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு 23 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்து நிறைவேறியது.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையில் இரு தரப்பினரும் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கான காலம் இப்போது தோன்றியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த வாக்களிப்பின் போது இந்தியா நடுநிலை அளித்தது அந்நாடு அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக இடம்பெற்றிருப்பது குறித்து தாம் மனநிறைவடைவதாகவும், இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தமை எங்கள் நாட்டுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

நாம் உள்ளூரில் திட்டமிட்டு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழு பல முக்கிய பரிந்துரைகளை இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்மொழிந்துள்ளது என்றும் இதனை தமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு சிறிது கால அவகாசம் அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி, நான் இதனை நடைமுறைப்படுத்துவற்கு தீர்மானித்திருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் கூறினார்.

அமெரிக்கா தனது இந்த பிரேரணையை ஆதரிக்க உதவிகோரி பாரிய பிரசாரங்களை செய்ததனால் ஆரம்பம் முதல் இலங்கை ஆதரவற்ற நிலையிலேயே இருந்தது என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னரே அமெரிக்காவுக்கு 12 மேற்பட்ட நாடுகள் ஆதரித்த போதிலும் அன்று இலங்கை சார்பில் ஒரு நாடு கூட இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கைக்கு அதிர்ச்சியளித்த மூன்று நாடுகள்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட சில நாடுகள் கொண்டு வந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில், இலங்கை தோல்வியடைந்தமை குறித்து மிகவும் கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தானும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்திரவதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சகல நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் நாட்டின் நிலைமைகள் பற்றி விளக்கமளித்திருந்தோம்.

26 ஆம் திகதி இரவு வரை மூன்று முக்கிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தன.

இறுதி நேரத்தில் அந்நாடுகள் தமது முடிவை மாற்றிக்கொண்டமை எமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகித்தமை ஜனாதிபதியும் நாடு அடைந்த வெற்றி என்றும் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.