வெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்சி! மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

Written by vinni   // March 24, 2014   //

president-mahinda-rajapaksa-newsfirstவெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் 3-வது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் ஆதரவை பரிசோதித்துப் பார்க்கும் களமாக ராஜபக்ச கருதுகிறார்.

இரு மாகாணங்களிலும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்துவரும் அவர், இலங்கையின் தென்மேற்கில் உள்ள களுத்துறை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது-

இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றன.

இலங்கைக்கு எதிரான சக்திகளிடம் உள்ள அடமானப் பொருட்களைப் போல் எதிர்க்கட்சிகள் மாறிவிட்டன.

மக்களின் மனதை வெற்றி கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். எனவே அரசை கவிழ்ப்பதற்காக சர்வதேச உதவியை எதிர்பார்க்கிறார்கள்.

மேடம் நவநீதம்பிள்ளை ’(ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர்) மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை இலங்கை அரசுக்கு எதிராக உலக தமிழ் ஆதரவாளர்கள் மாற்றிவிட்டனர்.

இதனால்தான் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்ததற்காக நமக்கு தண்டனை வழங்க முயற்சிக்கிறார்கள்.

தமிழர்களுக்கு எதிராக நாம் போராடவில்லை. தீவிரவாதத்துக்கு எதிராகவே போராடினோம்.

இந்த தேர்தல் மூலம் வாக்காளர்கள் அவர்களுக்கு வலுவான பதிலை அளிக்க வேண்டும்.

வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற செய்தியாக அது இருக்க வேண்டும். இவ்வாறு ராஜபக்ச கூறினார்.

மக்களின் தீர்மானத்திற்கு மட்டுமே தலை வணங்கப்படும் – ஜனாதிபதி

மக்களின் தீர்மானத்திற்கு மட்டுமே தலை வணங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மானத்திற்கு எந்த வகையிலும் தலை வணங்கப் போவதில்லை.

ஜெனீவாவில் எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும், மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதியானது.

எதிர்வரும் மாகாணாசபைத் தேர்தலில்; மக்கள் அளிக்கும் தீர்மானம் சர்வதேச சமூகத்திற்கு ஓர் பாடமாக இருக்கும்.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சில பிரச்சினைகள் எழுவது வழமையானது.

அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

மக்கள் மத்தியில் செல்ல முடியாத எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளின் ஒத்துழைப்பைக் கொண்டு ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றன.

எம்மை மின்சார நாற்காலியில் அமர்த்த சில தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எமது நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யாமல் உங்கள் வேலையை பார்த்துக்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்திற்கு உரத்த குரலில் சொல்ல எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு பணத்தில் வாழ்க்கை நடத்தி வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டுக்கு எதிராக பல்வேறு போலி அறிக்கைகளை அனுப்பி வைத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.