மனித உரிமைகளை மீறிய ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்குவதே பிரேரணையின் நோக்கம் – சரத் பொன்சேகா

Written by vinni   // March 23, 2014   //

sarathfonsekaஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமைகளை மீறிய ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்குவதே அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் முன்வைக்க உள்ள பிரேரணையின் நோக்கமே அன்றி, நாட்டையோ நாட்டு மக்களையோ பாதிப்புக்கு உள்ளாக்கும் நோக்கம் கிடையாது.

இலங்கை இராணுவம் எந்த குற்றங்களை செய்யவில்லை. இராணுவத்தினர் மீது குற்றங்கள் சுமத்தப்படுமாயின் அதற்கு பதிலளிக்க நான் தயாராக இருக்கின்றேன்.
அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு என்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்.

இராணுவத்தினரை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் கூறுவது பொய்.

ஒரு நாட்டின் ஆட்சியாளர் சட்டத்தை மீறி சர்வாதிகாரமாக செயற்பட்டால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேச சமூகத்திற்கும் மாத்திரமல்ல ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் அந்நாட்டில் தலையீடுகளை மேற்கொள்ள முடியும்.

இதுதான் சர்வதேச சட்டம். இலங்கையின் இன்றைய ஆட்சியாளர் அவ்வாறான ஒன்றை எதிர்நோக்க வேண்டியிருந்தால், அதில் எப்போதும் தப்பிக்க முடியாது என்றார்.


Similar posts

Comments are closed.