யுக்ரைனில் ரஷ்ய தலையீட்டை ஆதரிக்கும் இலங்கையின் இரட்டை நிலைப்பாடு

Written by vinni   // March 22, 2014   //

flag_russiaயுக்ரைன் நெருக்கடி தொடர்பான இலங்கை வெளிவிவகார அமைச்சு அண்மையில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

உலக நாடுகள் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர்களுடன் செயற்படும் போது ஜனநாயகத்தை மதித்து செயற்பட வேண்டும் என்பதே இலங்கையின் கொள்கை.

இதனால் யுக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவ்ச் அரசியல் அமைப்புக்கு விரோதமாக அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதை இலங்கை ஏற்கவில்லை.

யுக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை வழமைக்கு கொண்டு வர ரஷ்ய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவு வழங்கும் என அந்த அறிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

யுக்ரைனில் என்ன நடக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்நாட்டு ஜனாதிபதியின் தன்னிச்சையான ஆட்சியை கவிழ்க்க வீதியில் இறங்கி, அந்நாட்டு மக்கள் போராடியதால் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.

அவர் ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், அவர் மக்களின் பணத்தை பயன்படுத்தி வாழ்ந்து வந்த ஆடம்பர வாழ்க்கை குறித்தும், அரசியல் அமைப்புக்கு முரணான அவரது தன்னிச்சையான ஆட்சி பற்றியும் பல தகவல்கள் வெளியாகின.

யனுகோவ்ச் மக்களின் ஆணையில் ஆட்சிப் பீடம் ஏறி, அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இவரும் உலகில் ஏனைய தன்னிச்சையான ஆட்சியாளர்கள் வர்க்கத்தின் ஒருவரே அன்றி மாறுப்பட்டவர் அல்ல. இப்படியான ஒருவரை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது ஜனநாயக ரீதியில் சிறந்த விடயமாகும்.

யனுகோவிச் ஒரு ரஷ்ய ஆதரவாளர். விக்டர் யனுகோவ்ச் என்ற தனது ஆதரவாளன் ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதும் ரஷ்யா, யுக்ரைனின் ஒரு பகுதியான கிரிமீயாவுக்கு தனது ஆயுதப்படைகளை அனுப்பியது.

கிரிமீயாவில் உள்ள சனத் தொகையில் 58 வீதமானவர்கள் ரஷ்யர்கள் என்றும் அவர்களின் பாதுகாப்பு என்பது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்றும் கூறி தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா நியாயப்படுத்தியது.

கிரிமீயாவுக்கு படைகளை அனுப்பியது மட்டுமல்லாது, அந்த பிராந்திய நாடாளுமன்றத்தின் ஊடாக யோசனை ஒன்றை கொண்டு வந்து அதனை தன்னுடன் இணைந்து கொள்ள ரஷ்யா நடவடிக்கை எடுத்தது.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனையை கிரிமீயா மக்கள் ஊடாக அங்கீகாரத்தை பெற சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது.

இலங்கை அரசாங்கம், ரஷ்யாவின் நடவடிக்கைகளை அங்கீகரித்தன் மூலம் ரஷயா படைகள் கிரிமீயாவுக்குள் சென்றுள்ளதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் இலங்கை ரஷ்யாவின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்பு என்று கூறி இலங்கை சர்வதேசத்திடம் இதுவரை புரிந்து வந்த தர்க்கம் உடைப்பட்டு போயுள்ளது.

முக்கியமாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தலையீடு இருக்கக் கூடாது என இலங்கை கூறி வருகிறது.

இப்படியான தலையீடு இலங்கையின் இறையாண்மையில் தேவையின்றி தலையீடு செய்வதாகும் எனவும் இலங்கையின் பிரச்சினையை இலங்கைக்குள் தீர்த்து கொள்ள இடமளிக்க வேண்டும் எனவும் இலங்கை கூறிவருகிறது.

இலங்கையின் இந்த தர்க்கத்தை யுக்ரைன் தொடர்பான பிரச்சினையில் முன்வைத்தால், யுக்ரைன் மக்கள் தமது ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடி அவரை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை.

கிரிமீய என்பது யுக்ரைனின் பகுதியான குடா நாடு. கிரிமீயாவில் உள்ள பெருபான்மை ரஷ்யர்களின் நலனை கவனத்தில் கொண்டு ரஷ்யா அங்கு நுழைவது என்பது யுக்ரைனின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறுவதாகும்.

இலங்கை ஒரு புறம் தனது இறையாண்மை பற்றி பேசிக்கொண்டு, அந்த நிகழ்ச்சி நிரலுக்கு முற்றும் முழுதும் புறம்பாக செயற்படும் ரஷ்யாவுடன் ஓரணியில் இருந்து கொண்டு இலங்கை வெளிக்காட்டும் வெளிநாட்டுக் கொள்கை என்பது என்ன?


Similar posts

Comments are closed.