மிஸ்ராவை பாராட்டிய டோனி

Written by vinni   // March 22, 2014   //

misra_002பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் மிஸ்ராவின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என அணித்தலைவர் டோனி பாராட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் டுவென்டி-20 உலக கிண்ணப் போட்டிகள் நடந்து வருகிறது, நேற்றுடன் தகுதி சுற்று முடிந்து சூப்பர்-10 போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோதின.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணி 9 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ரெய்னா 28 பந்தில் 35 ஓட்டங்களும்(4 பவுண்டரி, 1 சிக்சர்) வீராட் கோஹ்லி 32 பந்தில் 36 ஓட்டங்களும்(4 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 28 பந்தில் 30 ஓட்டங்களும்( 5 பவுண்டரி) எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில், சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. 70 முதல் 75 சதவீதம் வரை அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் இனி வரும் போட்டிகளிலும் அவரால் இதைவிட இன்னும் சிறப்பாக பந்துவீச முடியும் என்று நம்புகிறேன்.

நாங்கள் சில கேட்சுகளை தவறவிட்டோம், நாங்கள் சிறப்பாக விளையாடி விட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை.

தவான்– ரோஹித்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பின்னர் வந்த கோஹ்லியும், ரெய்னாவும் அதை சரியாக பயன்படுத்தி கொண்டனர், மிடில் ஆர்டரில் ரெய்னா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் முகமது ஹபீஸ், ஆடுகளம் துடுப்பாட்டவீரர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. இந்த ஆடுகளத்தில் 150 ஓட்டங்கள் எடுத்து இருக்க வேண்டும். நாங்கள் 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இந்திய சுழற்பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. குறிப்பாக மிஸ்ரா அபாரமாக வீசினார் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.