தமிழ் மக்களை மீண்டும் அச்சுறுத்தும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் – செல்வரட்னம் சிறிதரன்

Written by vinni   // March 22, 2014   //

mullai_army_005-450x340இலங்கையில் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதியும் சமாதானமும், நல்லிணக்கத்துடன் கூடிய ஐக்கியமும் நிலவும் என்று ஜனநாயகவாதிகள் பேராவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.

இனப்பிரச்சினைக்கு தாராள சிந்தையுடன் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்வை முன்வைத்துத் தங்களுடைய அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். யுத்தத்தில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் உண்மையான போர்க்கால கஸ்டங்களையும், அரசாங்கத்தின் நெருக்குதல்களையும் விலக்குவார் என்று நம்பினார்கள். இலங்கையின் உண்மையான ஓர் அரசியல் தலைவராக, அனைத்து மக்களினதும் நம்பிக்கைக்குரிய தேசியவாதியாகச் செயற்பட்டு தாங்கள் இதுகால வரையிலும் அனுபவித்து வந்த எல்லாவிதமான கஸ்டங்கள், துன்பங்களுக்கு முடிவு கட்டுவார் என்று எண்ணியிருந்தார்கள்.

போர்க்காலத்திலும், இறுதிப் போருக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இராணுவத்தினர் மேற்காண்டிருந்த நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருந்தார்கள். அந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார ரீதியான அடக்குமுறைகள், பாதுகாப்பு என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகள் என்பன இந்த அரசாங்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளியை மிகவும் பெரிதாக்கியிருந்தது.

அடக்குமுறைகளின் மொத்த வடிவமாகவே இந்த அரசாங்கத்தைத் தமிழ் மக்கள் அப்போது நோக்கியிருந்தார்கள். ஏனெனில் அவர்களின் நடமாடும் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. தொழிலுக்காகக் கடலுக்குள் செல்ல செல்ல முடியாதவாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மீன்பிடி தொழிலுக்கு நேரமும் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கரையில் இருந்து மூன்று கிலோ மீற்றர் அல்லது ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மட்டும்தான் செல்ல முடியும் என்று தூரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. காலையில் ஒரு மணித்தியாலம் பிற்பகலில் ஒரு மணித்தியாலம் அல்லது பகல் பொழுதில் மட்டும் இரண்டு மணித்தியாலங்கள் அல்லது மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

கரையில் இருந்து கடலுக்குள் இறங்கும்போது கடும் சோதனைகள். கலில் சென்று மீன்பிடித்துக் கொண்டு திரும்பி வரும்போது மீன்கள் எல்லாம் நிலத்தில் கொட்டப்பட்டு தீவிரமாகச் சோதனையிடப்பட்டதுடன், கடலுக்குள் செல்வதற்காக வழங்கப்பட்ட பாஸ் அனுமதி அட்டை இருக்கின்றதா என்று சோதனையிடப்பட்டது. கடலில் மீன்பிடிக்கும் போது துண்டுக் காகிதத்தில் வழங்கப்படுகின்ற அந்த பாஸ், அனுமதித் துண்டு நனைந்திருந்தால், அல்லது காணாமல் போயிருந்தால் விசாரணைகள் கடுமையாக இருக்கும். சிலவேளை கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து தீவிர விசாரணைக்காக சில தினங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்பே விடுதலை செய்யப்படுவார்கள். சிலர் நீண்டகால தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் உண்டு. பலர் காணாமல் போனதும் உண்டு. நடுக்கடலில் மோதல்கள் நடந்தால் அனுமதி பெற்று கரையோரத்தில் மீன்பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி உயிர்ச்சேதங்கள் ஏற்படுத்திய சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

விவசாயிகள் வயல்கள், தோட்டங்களுக்குச் செல்ல முடியாது. வயல்களில் விவசாயம் செய்வதற்கு ஆதாரமாக உள்ள குளங்களுக்குச் செல்ல முடியாது. குளங்களில் இருந்து வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் வர்த்தக நடவடிக்கைகளும் முடக்கப்பட்டிருந்தன. போர்ப்பிரதேசங்களுக்குள் இரும்புக் கம்பிகள், முள்ளுக்கம்பிகள் கொண்டு செல்ல முடியாது என்று வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு அமைச்சு தடை செய்திருந்தது. காக்கி நிறத்திலான துணிகள், உடைகள், கறுப்பு நிறம் அல்லது பல கடும் நிறங்கள் கொண்ட துணிவகைகள், உடைகள் என்பனவும் தடைசெய்யப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எவரையும் எந்த நேரத்திலும், எங்கேயும் வைத்து சந்தேகமாக இருக்கின்றது எனக் கூறி கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அளவற்ற வகையில் வழங்கப்பட்டிருந்தது. மோதல்கள் இடம்பெற்றாலும், விடுதலைப்புலிகள் வேறு எங்காவது, இராணுவத்தினர் மீது பெரும் தாக்குதல்களை நடத்தினால், இராணுவத்தினருக்குப் பெரும் சோதங்களை ஏற்படுத்தினால் பழிவாங்கல் நடவடிக்கையாகப் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகள், தாக்குதல்கள் என்று பெரும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததனால் அரசு மீது தமிழ் மக்கள் மிகவும் அச்சமும் வெறுப்பும் அடைந்திருந்தார்கள்.

இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளின்போது, விடுதலைப்புலிகளும் நாட்டின் பொருளாதார மையங்கள், கேந்திர முக்கியத்துவமிக்க நிலைகள், அத்தியாவசிய தேவைகளான மின்சார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என்பவற்றில், இராணுவத்திற்கும், அரசுககும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். சில வேளைகளில் பழிவாங்கல் நடவடிக்கையைப் போன்ற தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தார்கள். இதனால் தமிழ் மக்கள் அல்லாதவர்களும் யுத்தச் சூழலில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் விடுதலைப்புலிகள் மீது வெறுப்பும் அச்சமும் கொண்டிருந்தார்களே தவிர, யுத்தத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, ஆக்கபூர்வமான பேச்சுக்களின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு மக்களின் மனங்களை வெல்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அசராங்கத்தின் மீது அவர்கள் வெறுப்பு கொள்ளவில்லை. மாறாக அரசாங்கம் செய்வது சரி என்றும், விடுதலைப்புலிகளே பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றார்கள் என்றும் நம்பினார்கள். இதற்கு அரசாங்கம் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து மேற்கொண்ட பிரசாரங்களும் பேருதவி புரிந்திருந்தன.

யுத்தத்திற்குப் பின்னரும் ஏமாற்றமே

இவ்வாறு மிக மோசமான யுத்தகாலச் சூழலுக்குள் வாழ்ந்து துன்பங்களையும் அளவற்ற கஸ்டங்களையும் அனுபவித்து, பெரும் எண்ணிக்கையிலான உறவுகளையும், உற்றவர்களையும் இழந்திருந்த தமிழ் மக்கள், இந்த யுத்தத்தினால் ஏற்பட்ட துன்பங்களும், கஸ்டங்களும் போதும். இனிமேலும் அத்தகைய நிலைமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது. நடந்தது நடந்துவிட்டது. போனது போகட்டும். சரியோ பிழையோ யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது. இனிமேலாவது நிம்மதியாக எங்கள் இடங்களில் நாங்கள் உரிமையோடு வாழ்வோம். அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். மாறாத துன்பங்களுக்கும், தீராத கஸ்டங்களுக்கும் முகம் கொடுத்திருந்தபோதிலும், யுத்த நெருக்குதல்கள் முடிந்துவிட்டதே என்று பெருமூச்சுவிட்ட தமிழ் மக்கள் இனிமேலாவது எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும். நல்லபடியாக அரசாங்கம் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். பாதிக்கப்பட்டிருந்த போதிலும், பெருந்தன்மையோடு நடந்தவற்றை மன்னித்து மறந்து இணைந்து வாழலாம் என்று இறங்கி முன் வரத் தயாராக இருந்தார்கள்.

ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மாறாக அடக்குமுறைகளும், நெருக்குதல்களும் சட்ட ரீதியான முறைகளிலும், தேசிய பாதுகாப்பு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஐக்கியம், இன ஒற்றுமை என்ற போர்வைகளிலும், இலங்கை என்பது அனைத்து மக்களுக்கும் சொந்தமான நாடு என்பதால் இலங்கையர்கள் என்ற ஓரின அடையாளம், பிளவுபடாத ஒரே நாடு என்ற வகையிலும் தமிழ் மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்களும் யுத்தத்தின் பின்னர் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். இந்த அடக்குமுறையும், இன அழிப்பை நோக்கிய ஒடுக்குமுறையும் அதன் உண்மையான சொரூப வடிவில் வெளியில் முழுமையாக இன்னும் சரியாக வெளிப்படவில்லை. வெளியில் தெரிய வரவில்லை. இது இந்த நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை இன மக்களின் சாபக்கேடாகவே தோன்றுகின்றது.

என்னதான் நடக்கின்றது?

யுத்தம் முடிவடைந்த பின்னர், வெற்றிக்களிப்பு தந்துள்ள போதையில் இருந்து அரசாங்கம் இன்னும் மீளவில்லை. மீளவில்லை என்பதிலும் பார்க்க, வெற்றிக்களிப்பில் இருந்து மீளாததுபோன்று காட்டி, ‘நாங்கள் சொல்வதே சரி, நாங்கள் எண்ணுவதைப்போலவே சிறுபான்மை இன மக்களும் எண்ணவேண்டும். அதன்படியே அவர்கள் நடக்க வேண்டும். எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு விடயத்திலும் அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. அரசாங்கத்தின் வழிமுறைகளை ஏற்று அப்படியே நடந்து கொள்ள வேண்டும்’ என்று பேச்சக்களிலும் செயல்களிலும் நடந்து வருகின்றது. அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முழுமையான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

சிறுபான்மை இன மக்கள் பெரும்பான்மை இன மக்களுக்கு சரிசமமாக அனைத்து உரிமைளோடும், அரசியல் அதிகாரங்களோடும் வாழ்வதற்குரிய அரசியல் நடைமுறை ஏற்பாடுகள் இந்த நாட்டில் இல்லையென்றே சொல்ல வேண்டும். பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள், மொழிப் பயன்பாடு, பிரதேச நிர்வாக உரிமைகள் போன்ற சில முக்கிய விடயங்கள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றபோதிலும், அவற்றில் சில சிக்கல்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றன. அதேநேரம் அந்த உரிமைகளை சிறுபான்மை இன மக்கள் அனுபவிக்கத்தக்க வகையில் நடைமுறைப்படுத்துவதும் கிடையாது. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளுக்கு முரணான வகையிலேயே பல காரியங்கள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன.

அரசியலமைப்பில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினாலும், பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்பது அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதை, ஒரு பாதகமான அம்சமாக அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். நாட்டு குடிமக்கள் அனைவரும் சமமானவர்கள் என்பது முக்கியமாக இருந்தபோதிலும், ஆட்சியில் திறமைக்கும், செயலூக்கத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படவி;ல்லை. மாறாக பெரும்பான்மை சிறுபான்மை என்ற வகையிலும், நாட்டின் முக்கிய இனங்களாகிய சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்ற வகையில் இனவிகிதாசாரத்திற்கு அதிக முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டிருக்கின்றது.

இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலேயே விகிதாசாரத் தேர்தல் முறையும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கல்வியில் அரச தனியார் தொழில் வாய்ப்புக்கள் என முக்கிய விடயங்கள் அனைத்திலும் இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலேயே தெரிவுகளும் சந்தர்ப்பங்களும் வழங்கப்படுகின்றன. இத்தகைய இனவிகிதாசார முறையும் கூட, உண்மையான விகிதாசாரத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. முடிந்த அளவில் சிறுபான்மை இனத்தவரை எண்ணிக்கை ரீதியாகக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஊக்கமளித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இனவிகிதாசார அடிப்படையில் இர்ணடாவது இடத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு அந்த இடம் சரியாக வழங்கப்படுவதில்லை. வேலைவாய்ப்பு, நிர்வாகத்துறைக்கான ஆட்சேர்ப்பு, முக்கியமான தலமைப் பதவிகள் என்பவற்றில் அண்மைய வருடங்களாகத் தமிழர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையற்ற வகையில் முஸ்லிம்களை முன்னிலைப்படுத்தும் போக்கு பகிரங்கமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மக்கள் வெளிப்படையாகவே ஓரம்கட்டப்பட்டு வருகின்hறர்கள்.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளுக்கு முரணான வகையில் இவ்வாறு தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுவது சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. மறுபக்கத்தில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், தேசிய பாதுகாப்பும், இராணுவத்தினருக்கான வசதி வாய்ப்புக்கள், உரிமைகள் என்பன நாட்டில் மிகவும் உச்சநிலையில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் ஒன்றிற்கு ஒப்பான வகையில் முப்படைகளையும் பொலிஸ் அணியையும் உடைய இராணுவ வல்லமை கொண்டிருந்த விடுதலைப் புலிகளுடனான வெல்ல முடியாத யுத்தத்தில் பல உயிர்த்தியாகங்களைச் செய்து வெற்றியை ஈட்டித்தந்த இராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையிலும், அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையிலேயே யுத்தத்தின் பின்னர், அவர்கள் நாட்டில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் உண்மை அதுவல்ல என்பது ஆய்வாளர்களினதும், அரசியல் அவதானிகளதும் கருத்தாக உள்ளது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன விகிதாசாரத்தை முன்னிலைப்படுத்தி, சிறுபான்மை இன மக்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளி, எல்லா வழிகளிலும் பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களுக்கு முதன்மை இடத்தை வழங்கியிருக்கின்றன. இது ஓர் அரசியல் மரபாகவே இலங்கையில் பேணப்பட்டு வந்திருக்கின்றது. இதற்கும் அப்பால் சென்று, பாரம்பரியமாகத் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களிலும் பெரும்பான்மை இன மக்கள் முதன்மை இடத்தைப் பெறத்தக்க வகையில் யுத்த வெற்றியை அடிப்டையாகக் கொண்டு, இந்த அரசாங்கம் இந்தநாட்டில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது, நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று யுத்தம் முடிவடைந்த கையோடு பிரகடனப்படுத்தியிருக்கின்றது.

ஒரே நாடு ஒரே மக்கள்

‘ஒரே நாடு. இலங்கையர் என்று ஒரே மக்கள். நாட்டின் எல்லா இடங்களும் எல்லோருக்கும் உரியது’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார். இது கேட்பதற்கு இனிமையாகவும், நன்மையானதாகவும் மேலோட்டமாகத் தெரிகின்றது. ஆனால், இதன் பின்னணியில் பரம்பரை பரம்பரையாக வடக்கு கிழக்கு;ப பிரதேசங்களில் வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களையும், அவற்றின் மீதான அவர்களுடைய உரித்தையும், பவலந்தமாகப் பறிப்பதற்கு இந்தக் கொள்கை வழி வகுத்துள்ளது. தமிழ் மக்கள் தலைநகரிலும், நாட்டின் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் பெரும் எண்ணி;க்கையில் சொந்தமாகக் குடியிருக்க முடியுமானால், வடக்கிலும் கிழக்கிலும் ஏன் சிங்கள மக்கள் சொந்தமாக்க குடியிருக்க முடியாது என்பது அரசாங்கத்தினதும், சிங்களத் தீவிரவாதிகளினதும் வாதமாகும். உண்மையில் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாகவே, வாழ்வாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகத் தேவைகளுக்காகத் தமிழ்; மக்கள் தலைநகரிலும் ஏனைய இடங்களிலும் சுயவிருப்பத்தின் பேரில் சாதாரண முறையில் குடியேறி வசித்து வருகின்றார்கள்.

பேரினவாதிகள் மற்றும், பேரினவாத அரசாங்கங்களின் பேரின சிந்தனையின் அடிப்படையிலான அரசியல் நோக்கத்துடன் தமிழ் மக்கள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியில் தென்னிலங்கையில் குடியேறியிருக்கவில்லை. சிங்கள மக்களும் சாதாரயான முறையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சென்று வாழ்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அதற்கு எதிர்ப்பும் இல்லை. ஆனால், சி;ங்கள மக்கள் அந்தப் பிரதேசங்களிலும் வாழ வேண்டும், அந்தப் பிரதேசத்தின் அரசியல் செல்வாக்கையும் அரசியல் உரிமைகளையும் கையகப்படுத்த வேண்டும். அதன் ஊடாக பிரதேச ரீதியாக தமிழ் மக்கள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகளை இல்லாமல் செய்து அவர்களை ஒடுக்க வேண்டும் என்ற கபடத்தனம் மிக்க அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களையே தமிழ் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கின்றார்கள்.

பிரதேசங்களுக்கு அரசியலமைப்பின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள காணி அதிகாரங்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரரங்களை, யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிகொண்டதன் பின்னர், புறந்தள்ளியும், சிறப்பு ஏற்பாடுகளின் மூலமாக அவற்றைப் படிப்படியாக வலுவற்றதாக்கியும வருகின்றது. இதனால், தமது பாரம்பரிய பிரதேசத்தின் மீதான உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக, தமிழ் மக்கள் மேற்கொண்டு வந்துள்ள அரசாங்கத்தின் காணிக் கொள்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகள் படிப்படியாகப் பலமிழந்து வருகின்றது. அண்மைக்காலமாக இதனை மிகவும் தௌவாகக் காண முடிகின்றது. யுத்தம் காரணமாக வேரோடு தமிழ் மக்கள் தமது சொந்தக் கிராமங்களில் இருந்தும், சொந்தக் காணிகளில் இருந்தும் இடம்பெயர நேர்ந்தமையும், தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஊக்கமளித்திருக்கின்றது. அத்துடன், முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தப் பிரதேசங்களில், முறையாகப் பராமரிக்கப்படாதிருந்த வீதிகள், விவசாய குளங்கள், உள்ளிட்ட உட்கட்டமைப்புக்களின் சீரழிந்த நிலையும், யுத்தம் முடிவடைந்ததையடுத்து, அவற்றைப் புனரமைக்கின்றோம், அந்தப் பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றோம் என்ற போர்வை அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்குப் பெரிதும உதவியிருக்கின்றது.

மீட்சிக்கு வழியென்ன?

ஐநா மனித உரிமைப் பேரவையில் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமைச் செயற்பாடுகளில் நெருக்கடி கொடுத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்குத் தமிழ் மக்கள், இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் என்பவற்றை மீளுறுதி செய்யும் தந்திரோபாயத்தைக் கையில் எடுத்திருக்கின்றார்கள். இதனை முறியடிப்பதற்காக, ஏற்கனவே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொலிசாருடன் முப்படைகளையும் பயன்படுத்தலாம் என்று ஏற்படுத்தியுள்ள சட்ட விதிகளை, அரசு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

இந்த வகையிலேயே அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத போதிலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சில நடைமுறைகளைப் பயன்படு;;த்தி, யுத்த காலத்தில் நடந்து கொள்வதைப்போன்ற இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் தேடுத்ல் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

தமிழ் இளைஞர்கள் பலர் காணாமல் போகச் செய்யப்பட்ட, மனித உரிமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் குரல்கள் ஜெனிவா மனித உரிமைப் பேரவை வரையில் உரத்தும் உரமாகவும் ஒலிப்பதையும், தொடர்ந்து ஒலிக்கப்போவதையும் தடுத்து நிறுத்துவதற்காகப் புலிகள் மீண்டும் அணிசேர்கின்றார்கள் என்ற போலி பிரசாரத்தை முன்னெடுத்து, காணாமல் போயுள்ள ஒரு மகனின் தாயாராகிய ஜெயக்குமாரியைக் கைது செய்து, அவரிடமிருந்து அவருடைய 14 வயது மகளைப் பிரித்து சிறுவர் இல்லம் ஒன்றில் முடக்கி வைத்திருக்கின்றது.

அத்துடன் அரசுக்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று குற்றம் சுமத்தி, விபரங்களும் பின்னணியும் தெரிவிக்கப்படாத இரண்டு இளைஞர்களி;ன் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டு அவர்களைத் தேடுகின்றோம் என்ற போர்வையில் வன்னியில் உள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தும் பாணியில் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. யுத்தத்தின் பின்னர் இனங்களுக்கிடையி;ல் நல்லிணக்கத்iதையும், நல்லுறவையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கின்றது என மேற்கொள்ளப்படுகின்ற அரசாங்சகத்தின் அரசியல் பிரசாரத்தைக் கிழித்து நாராக்கியிருக்கின்றது. அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் அடக்கி ஒடுக்குவத்றகாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளைத் தெளிவாகத் தோலுரித்து காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது.

யுத்த வெற்றியை அரசியல் முதலீடாகக் கொண்டு அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ள இந்த அரசியல் போக்கிலிருந்து சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் எவ்வாறு விடுபடப் போகி;ன்றார்கள், எவ்வாறு தப்பிப் பிழைக்கப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.


Similar posts

Comments are closed.