பிரிட்டனில் பெருமளவில் போர்க்குற்றவாளிகள்

Written by vinni   // March 22, 2014   //

uk-flagபிரிட்டனில் இருக்கக்கூடிய போர்க்குற்றவாளிகளின் அதிகாரபூர்வமான எண்ணிக்கை, குறைவானதாக இருக்கலாம் என பிரிட்டனின் குடிவரவு விடயங்களைக் கையாளும் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் கூறியிருக்கிறார்.

பிரிட்டனில் இருக்கக் கூடிய போர்க்குற்றவாளிகளின் உண்மையான எண்ணிக்கையை அறிவதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமோ, அந்த முக்கியத்துவம் அந்த விவகாரத்துக்கு கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

பிரிட்டிஷ் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குனரான பிரையன் மோர் அவர்கள், பிபிசியின் ரேடியோ 4 வானொலிக்கு பேசுகையில், தமது போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து எவராவது தாமகவே தகவல்களை தந்தால் மாத்திரமே அவற்றை அதிகாரபூர்வ தகவல்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் சேர்த்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும் பிரிட்டனுக்கு வருபவர்களை சோதனை செய்யும் முறைகளை தாம் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக பிரிட்டனில் போர்க்குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதாக பிரையன் மோர் கூறுகிறார்.

” நான் சில மோசமான, பயங்கரமான விசயங்களில் சம்பந்தப்பட்டதால், எனது நாட்டில் எனக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறி எவராவது தஞ்சம் கோரினால், அவர் குறித்த தகவல்கள் அறியப்படுகின்றன. ஆனால் எல்லாரும் தாம் செய்த போர்க்குற்றங்களை முழுமையாகச் சொல்வதில்லை என்பதால், எமது தரவுகள் முழுமையடைவதில்லை.” என்கிறார் பிரையன் மோர்.

போர்க்குற்றம் என்பது ஒரு பெரிய அளவில் நடப்பதாலும், பல மட்டங்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் அவற்றில் சம்பந்தப்படுவதாலும், அவை குறித்த முழுமையான தகவல்களைப் பெற முடிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அதேவேளை போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள் ஒரு கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தெளிவான யுக்தி கிடையாது

பிரிட்டனில் சித்ரவதைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஒன்றை ஏற்பாடு செய்துள்ள பிரையன் மோர் அவர்கள், பிரிட்டனில் போர்க்குற்றவாளிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து அறிவதற்கு ஒரு தெளிவான யுக்தி கிடையாது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியவர்களில் 115 போர்க்குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளது.

ஆனால், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது என்று கூறும் பிரைன் மோர் அவர்கள், போர்க்குற்றத்தால் பாதிக்கப்பட்டு, பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்களிடமும் இது குறித்த சாட்சியங்களை அரசாங்கம் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

பிரிட்டனில் போர்க்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில், ஆப்கானிஸ்தான், இரான், இராக், லிபியா, ருவண்டா, சேர்பியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குகிறார்கள்.

2012 ஜனவரி முதல் 2013 ஏப்ரல் வரையில் 800 தஞ்சங்கோரிகள் போர்க்குற்றவாளிகளாக அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றவாளிகளாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்துறை அலுவலகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

2005 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் 700 போர்க்குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Source: BBC


Similar posts

Comments are closed.