மாற்றுச் சிந்தனையாளர்களை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது- பீட்டர் ஸ்பிலின்டர்

Written by vinni   // March 21, 2014   //

downloadமாற்றுச் சிந்தனையாளர்களை இலங்கை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அழுத்தங்களை அரசாங்கம் கைவிட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையான சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர்(Peter Splinter) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளாகளான ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த விடுதலைகள் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான மனித உரிமை நிலைமைகள் குறித்து குரல் கொடுக்கும் தரப்பினர் ஒடுக்கப்படக் கூடாது, அமைதியான முறையில் தங்களது கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதன் மூலம், சர்வாதிகார நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பெறக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கி வருவது வருத்தமளிப்பதாக பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.