இலங்கையின் தேசிய மருந்துக் கொள்கை மக்களுக்காகவா?

Written by vinni   // March 20, 2014   //

president-mahinda-rajapaksa-newsfirstஇலங்கையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேசிய மருந்துக் கொள்கை சட்டவடிவம் பெறத் தயார் நிலையில் இருப்பதாக நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

‘மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவது’ தான் தேசிய மருந்துக் கொள்கையின் அடிப்படை நோக்கம் என்று அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வெறும் பேச்சு மட்டத்திலேயே இருந்துவந்த தேசிய மருந்துக் கொள்கையை பகிரங்கப்படுத்தாமல் அரசு அவசரமாக சட்டமாக்கப் பார்ப்பதாக மருத்துவ உரிமைச் செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தேசிய மருந்துக் கொள்கை உண்மையில் மக்களின் நலனை மட்டும் நோக்காகக் கொண்டதா அல்லது மருந்துக் கம்பனிகளின் தேவை கருதி உருவாக்கப்பட்டுள்ளதா என்று இலங்கையின் மருந்துக் கொள்கை முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் சேனக பிபிலே-வின் ஞாபகார்த்தமாக இயங்கும் சிவில் செயற்பாட்டு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேசிய மருந்துக் கொள்கை தயார் நிலையில் இருப்பதாக கடந்த காலங்களிலும் அரசு கூறிவந்திருப்பதாகவும் பேராசிரியர் சேனக பிபிலே ஞாபகார்த்த மன்றத்தின் தேசிய அமைப்பாளர் மருத்துவர் ஜயந்த பண்டார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

‘சேனக பிபிலே கொள்கை’
தற்போது உருவாகியுள்ள தேசிய மருந்துக் கொள்கை, பேராசிரியர் சேனக பிபிலேவின் கொள்கைத் திட்டங்களை அடியொற்றியது என்று அரசு பிரச்சாரம் செய்துவந்தாலும் அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பது கேள்விக்குறியே என்று மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

1970-களின் முற்பகுதியில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபக தலைவரான பேராசிரியர் சேனக பிபிலே, மருந்து உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற யோசனையை கொள்கைத் திட்டமாக முன்வைத்திருந்தார்.

அரச மருந்து நிறுவனம் என்ற சிந்தனையை உலகுக்கு அறிமுகப்படுத்துவதிலும் அவர் முன்னோடியாகத் திகழ்ந்ததாக சேனக பிபிலே மன்றத்தினர் கூறுகின்றனர்.

சேனக பிபிலே முன்வைத்த கொள்கைத் திட்டத்தை பல நாடுகள் முன்னுதாரண மாதிரித் திட்டமாக பின்பற்றியுள்ளதாகவும் மருத்துவர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டுகின்றார்.

எனினும் அவரது தேசிய மருந்துக் கொள்கை இதுவரை இலங்கையில் சாத்தியப்படவில்லை.

வௌிநாட்டு மருந்துக் கம்பனிகள்
இலங்கையில் மருந்துக் கம்பனிகள் 200 முதல் 800 வீதம் வரையில் லாபம் சம்பாதித்துவருவதற்கு முறையான தேசியக் கொள்கை ஒன்று இல்லாமையே காரணம் என்று மருத்துவச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை 2010-ம் ஆண்டில் 24.5 பில்லியன் ரூபாவை மருந்து இறக்குமதிக்காக செலவிட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தச் செலவு 47 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகியுள்ளதாகவும் சேனக பிபிலே மன்றத்தின் தேசிய அமைப்பாளர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நாட்டின் மருந்துத் தேவையில் வெறும் 10 வீதமளவே உற்பத்தி செய்வதாகவும் அதனால் நாட்டு மக்கள் வெளிநாட்டு மருந்துகளையே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாகவும் சேனக பிபிலே மன்றம் கூறுகிறது.

இதற்கிடையே, தேசிய மருந்துக் கொள்கைக்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று இலங்கையின் துணை சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தமிழோசையிடம் கூறினார்.

மருத்துவர்கள் வணிகப் பெயர்களுக்குப் பதிலாக பொதுவான மருத்துவப் பெயரில் மட்டும் (Generic Name) மருந்துகளை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று புதிய கொள்கையின் மூலம் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.