பாதுகாப்பு கேள்விக் குறியாக இருப்பதனால் தான் இளைஞர் யுவதிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடுகின்றனர்

Written by vinni   // March 15, 2014   //

TNAபாதுகாப்பு மற்றும் தொழில் வாய்ப்பு என்பன கேள்விக் குறியாக இருப்பதனால் தான் தமிழர் வாழ் பிரதேசங்களில் இருந்து இளைஞர் யுவதிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடுகின்றனர் என அவுஸ்திரேலியக் குழுவினருக்கு வடக்கு மாகாண அமைச்சர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களம் மற்றும் வர்த்தக பிரிவைச் சேர்ந்த ஜோன் பொனார் உள்ளிட்ட குழுவினர் வடக்கு அமைச்சர்களான குருகுலராசா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்போது அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டதாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வது தொடர்பிலும் பேசினர். எனினும் இங்கிருந்து யாரும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதை கொள்கை அளவில் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் இன்று அவர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு இல்லை. அத்துடன் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பும் இல்லை என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அத்துடன் வேலை இன்மை என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று எங்களிடம் கேட்டார்கள் அதற்கு நாம் வடக்கில் பெரும்பாலான தொழிலை இராணுவமே செய்கின்றது என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம்.

அதன்படி விவசாயம், பாற்பண்ணைகள் மற்றும் கடைகள் அமைப்பது வரை இராணுவமே செய்து வருகின்றது. இதனால் எமது இளைஞர்களது வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகின்றது.

அதேசமயம் தடுப்பில் இருந்து விடுபட்ட போராளிகள் இன்னமும் சமூகத்தில் இணைக்கப்பட்டும் ஐக்கியப் படாது உள்ளார்ந்த ரீதியாக பாதிப்படைந்து உள்ளனர்.

எனவே அவர்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெறும் இடத்து அவர்களுக்கு இருக்கும் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. அவர்கள் வடக்கை விட்டோ அல்லது வேறு பிரதேசங்களுக்கு வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

மேலும் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இராணுவத்திற்கு பெண்கள் குறிவைத்து இணைக்கப்படுகின்றனர். எனினும் படையில் அரசாங்கம் பெண்களை இணைப்பது தப்பு இல்லை எனினும் இங்கு ஒரு வற்புறுத்தல் பாணியில் பெண்களின் வீடுகளுக்குச் சென்று வலுக்கட்டாயமாக இணையுமாறு கோருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினோம்.

இவ்வாறான நிலையில் தமது இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்வதை தான் விரும்புவார்கள். எனவே வடக்கில் இராணுவம் குறைக்கப்பட வேண்டும்.

அத்துடன் புனர்வாழ்வு வழங்கப்பட்டதாக அரசு கூறுகின்றது . அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தனர். அதற்கு நாம் புனர்வாழ்வில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு சமூகத்தில் வாழும் நிலையில் அனுப்பவில்லை. மாறாக வந்து எதுவும் செய்ய முடியாதவர்களாக தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட போராளிகள் மீளவும் கைது செய்யப்பட்ட விடயங்கள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துக் கூறியிருந்தோம். வாழ்வதற்கு உத்தரவாதம் இல்லாதபடியால் தான் அவர்கள் இடம்பெயர்கின்றனர் என்பது குறித்தும் தெளிவுபடுத்தினோம்.

அதற்கு தங்கள் நாட்டுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று நடைபெற்ற தர்மபுர சம்பவம் குறித்தும் சில உண்மைத் தன்மைகளையும் குழுவினருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.