பீரிஸின் ஜெனிவா உரைக்கு த.தே.கூட்டமைப்பு விளக்கம்

Written by vinni   // March 13, 2014   //

r.sampanthanஜெனிவாவில் மார்ச் 5 திகதி நடைபெற்ற மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரின் உயர் மட்ட நிரலின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்கொண்ட கூற்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

1. இலங்கையில் வசிக்கும் மக்கள் பிரிவினர் இடையே சுயமரியாதையுடனான நிரந்தர அமைதி, சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றை கட்டியெழுப்பவதற்கு பொறுப்புக் கூறல் மற்றும் மீளிணக்கம் என்பன முக்கிய தேவைகளாக இருக்கின்றன.

2. இதன் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மேற்கொண்ட உரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் காணப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமென நாம் கருதுகின்றோம்.

மீளிணக்கம் ஏற்பட வேண்டுமானால் தீர்க்கமான அரசியல் தீர்வொன்று அவசியமாவதுடன், அதுவே மீளிணக்கத்திற்கான அஸ்திவாரமும் ஆகும். பாராளுமன்றரத் தெரிவுக் குழு பற்றி குறிப்பிட்ட மதிப்பிற்குரிய பேராசியர் அவர்கள் அச்செயற்பாட்டில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசு விடுத்து வந்த அழைப்பை அது ஏற்காமல் இருந்து வந்தைமையே தீர்வொன்றை அடைவதற்கான முக்கிய தடையாக இருந்ததாக கூறினார். இது உட்பட, இக்கூற்றில் உள்ள மேலும் பல பிழைகளை சரி செய்வது அவசியமாகும்.

2.1 ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத ஒரு இலங்கையில் எட்டப்படக்கூடிய தீர்வொன்றிற்கான திட்ட வரைபடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்ததன் பின் இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே 2011 ஜனவாரி மாதத்தில் இரு தரப்புப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின. இதன் பின் அவ்வாண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதற்கான தமது யோசனைகளுடன் இலங்கை அரசிற்கு தமது திட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்தது.

2.2 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகளுக்கு எழுத்து மூலம் பதில் அளிப்பதாக இலங்கை அரசின் குழுவினர் வாக்களித்தாலும், 5 மாத காலம் சென்ற பின்னரும் 7 கூட்டத் தொடர்கள் நடந்த முடிந்த பின்பும் அதை அவர்கள் நிறைவேற்றவில்லை.

உண்மையில் இந்தத் திகதி வரை அதற்கான பதிலை அவர்கள் நமக்குத் தரவில்லை. எனவே எமது யோசனைகள் தொடர்பான இலங்கை அரசின் கருத்துக்களை அறிந்த பின்னர் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளை தொடரலாம் என 2011 ஆகஸ்டு 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு அறிவித்தது.

2.3 அதன் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அழைப்பொன்றின் பேரில் 2011 செப்டெம்பர் 2 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஜனாதிபதி அவர்களை காணச் சென்றார்.

மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசிப்புக்களின் போது பிரஸ்தாபிக்கப்பட்ட சகல விடயங்களையும் 13 வது சீர்திருத்தின் பின், பேச்சு வார்த்தைகளுக்கு உட்படுத்தி, அதன் பின் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பம் செய்யலாம் எனவும், அந்த கலந்துரையாடல்களுக்குப் பின் இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் காணும் விடயங்களை, வெகு விரைவில் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன் சமர்பிக்கலாம் என்றும் அதன் போது கூறப்பட்டது.

2.4 2011 செப்டெம்பர் மாதம் 16 இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே ஏற்பட்ட இணக்கப்பாடுகளை மேலே குறிப்பிட்டவாறு நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டன.

2.5 குறிப்பிடும்படியான முன்னேற்றம் எதுவும் இன்றியே பேச்சு வார்த்தைகள் பெயரளவில் நடைபெற்று வந்தன. 2012 ஜனவரி 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த கலந்தாலோசிப்புத் தொடர்களுக்கு அரச தரப்பில் இருந்து ஒருவர் கூட சமூகமளிக்கவில்லை. உண்மையில் பேச்சு வார்த்தைகளை தொடர முடியாமல் போனதற்கான பின்னனி இவைகளேயாகும்.

2.6 அதைத் தொடர்ந்து 2012 ஜனவரி மற்றும் மே மாதங்களில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்குத் தடையாக இருந்தது இலங்கை அரசின் ஆர்வமற்றப் போக்காகும். இவை அனைத்தும் அறிக்கைப்படுத்துள்ளன.

2.7 இதற்கிடையே பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட, அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் அமைச்சரவை சேர்ந்தவர்களுமான அரச தரப்பினர் ஒரு பகிரங்கப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

அதில், 13 வது சீர்திருத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும், அதனடிப்படையில் காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டும் எனவும், மேலும் அதில் உள்ள சில விடயங்களை முற்றாக நீக்கவோ அல்லது மாற்றங்களை ஏற்படுத்தவோ வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறு கூறியவண்ணம் நம்மை தெரிவுக் குழுவில் பங்கேற்கும்படியும் கட்டாயப்படுத்தினர்.

2.8 பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் 31 உறுப்பினர்கள் உட்படுவர் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் கட்டமைப்பில் அரச தரப்பில் இருந்து 19 பேரும், எதிர்கட்சி தரப்பில் இருந்து 12 பேரும் உட்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தரப்பினரில் 3 அல்லது 4 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்றும் இருந்தது.

இந்த நிலையில் அரசாங்கத் தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே தர்க்கரீதியான ஒரு உடன்பாடு ஏற்பட்டாலேயன்றி, ஏற்கக் கூடிய, நியாயமான ஒரு இணக்கப்பாடு ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவாகவே தென்பட்டது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்கி வந்ததன் பின்னனி இதுவேயாகும். ஆனால் தற்போது நிலைமை இன்னும் மோசமாகி தெரிவுக் குழுவில் அரச தரப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி அவர்கள் இடையே ஏற்பட்ட இணக்கப்பாடு அடிப்படையில் செயற்படுமாறே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.

2.9 அரசியல் தீர்வொன்றிற்கான யோசனைகளை அரசாங்கமே முன்வைக்க வேண்டும் என கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசிட்கு அறிவுறுத்தி வந்தாலும் அதையும் இது வரை அசரால் மேற்கொள்ள முடியவில்லை. ஏற்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான மனப்பூர்வமான ஆர்வம் உண்மையில் அரசிடம் இருக்கின்றதா என்ற சந்தேகத்தையே இது ஏற்படுத்ததுகின்றது.

3. நாம் மேலே விளக்கியுள்ள விடயங்களின் அடிப்படையில், ஏற்கக்கூடிய அரசியல் தீர்வொன்றை அடைய முடியாமல் போனதற்கு வெளிவிவகார அமைச்சர் முன்வைத்துள்ள காரணங்கள் உண்மை நிலையை பிரதிபலிப்பவையாக இல்லை.

4. பொறுப்புக் கூறல் மற்றும் உண்மையை உரைத்தல், நல்லிணக்கத்திற்கான அடித்தளங்களாகும். 2006 ஜனவரி மாத்தில் திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதே ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் ACF தொண்டு அமைப்பை சேர்ந்த 17 தொண்டர்கள் கொலை செய்யப்பட்டமை ஆகியன அது வரை மேற்கொள்ளப்பட்ட மோசமான பாதகச் செயல்களில் உச்சங்களாகும்.

தற்போது, அவை நடந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி பேராசிரியர் பீரிஸ் இச்சபையில் பேசுகின்றார். அதே போல அதற்கு முன்பு நடைபெற்ற கொடுமைகள் பற்றியும் பிரஸ்தாபிப்பது அவசியமாகும். மேற்குறிப்பிட்ட படுபாதகச் செயல்களுடன் மேலும் பலவற்றை பற்றி விசாரணை நடத்த ஜனாதிபதி அவர்கள் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார்.

சர்வதேச நியதிகளுக்கும் தரங்களுக்கும் உட்பட்டு விசாரனைகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக முக்கிய நபர்களை கொண்ட சர்வதேச குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதன் போது, மேலே குறிப்பிட்ட இரு படுகொலை சம்பவங்கள் தொடர்பாக சாட்சிகளை கையாள்வதை சட்ட மாஅதிபரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ மேற்கொள்ளக் கூடாது எனவும் IIGEP குழு நிபந்தனை இட்டது.

அரசையும் பாதுகாப்புப் பிரிவினரையும் பாதுகாக்கும் விதத்தில் சட்ட மாஅதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முயற்சிகளை மேற்கொண்டமையையே இந்நிபந்தனைக்கான காரணமாக IIGEP குழுவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். அதே போன்று, சாட்சிகள் மற்றும் துன்புற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டமூலம் ஒன்றை இயற்றுவதன் அவசியம் பற்றியும் அக்குழு வலியுறுத்தியது.

இருப்பினும், அரசின் பூரண அனுசரணையுடன் சட்ட மாஅதிபர் தொடர்ந்தும் சாட்சியங்களை கையாண்டதோடு, சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வலியுறுத்தலும், முதலில் ஆரம்பிக்கப்பட்டு, இரு தடவை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கும் ஏடுத்துக் கொண்டதன் பின் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் சாட்சிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பல அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டே வெளியேறினர். அதன் பின் தொலைபேசி மூலம் அவர்களுடைய சாட்சிகளை பதிவு செய்யும் செயற்பாட்டையும் நிறுத்திவிட அரசு நடவடிக்கை எடுத்தது.

5. அதன் பின் “நடைபெற்றுள்ள மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நியதிகளின் படி விசாரணை நடத்துவதற்காக உண்மையான ஆர்வமோ, தேவையோ இலங்கை அரசுக்கு இருப்பதாக தென்படவில்லை” என பகிரங்கமாகவே அறிவித்துவிட்டு, IIGEP தன்னுடைய பாத்திரத்தில் இருந்து விலகிக் கொண்டது.

6. எவ்வாறிருந்த போதிலும். ஆணைக்குழு ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால், அது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட இரு பாதகச் செயல்கள் தொடர்பான உண்மை என்றாவது ஒரு நாள் வெளி வரும் என்பதற்கான சாத்தியப்பாடு மிகவும் அரிதாகவே உள்ளது.

பின்பு, நீண்ட நாட்களுக்குப் பின் ACF அமைப்பு சுயமாக ஒரு விசாரணையை நடத்தியதுடன், தமது தொண்டர்களை கொலை செய்தவர்கள் இராணுவத்தினரே என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

7. யுத்ததின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்ட தமிழ் பொது மக்களின் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்வதற்கு, அச்சமயத்தில் மோதல் நடை பெற்ற பகுதிகளில் சிக்கியிருந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அறிவது அவசியமாகும்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணிப்பு மூலம் இது சாத்தியமாகாது. மோதல் இடம் பெற்ற பகுதிகளில் சுமார் 60,000 பேர் இருந்ததாக அரசு கூறுகின்றது. ஆனால் சரியான கணிப்பீடுகளின் படி அவ்வெண்ணிக்கை 350,000 என நம்பப்படுகின்றது. மோதல் முடிவடைந்ததும் சுமார் 290,000 பேர் வெளியேறி வந்தனர். இது பற்றி அறிவதற்கு நேரடி அணுகுமுறையே அவசியமாகும். நிலைமையை மேலும் குழப்புவதால் எப்பயனும் ஏற்படப் போவதில்லை.

8. இதற்காக இராணுவ மேலிடமே அமைக்கும் இராணுவ விசாரணைக் குழுவின் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்பதை சொல்லத் தேவையல்லை. தங்கள் புறத்தில் இருந்து நடைபெற்ற அக்கிரமங்களுக்காக அவர்களையே நீதிபதிகளாக நியமிக்கும் போது அச்செயற்பாட்டில் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

மேலும், இவை தொடர்பாக இலங்கை அரசு காட்டி வரும் பிடிவாதம் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பதையே மேலும் உறுதி செய்கின்றது. இனியும் தன்னுடைய பொறுப்பை இலங்கை அரசு செய்து முடிக்க முன்வராவிட்டால் அதன் விளைவுகளை அனுபவிப்பதை தவிர்க்க முடியாமல் போகலாம். இருந்தாலும், சுயாதீனமான, நம்பத்தன்மை மிக்க உள்ளூர் விசாரணை ஒன்று நடைபெறுவதை நாம் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சாட்சி பகர்கின்றன.

9. காணி பிரச்சினைகளை தீர்ப்பது மிக அவசியமாவதுடன், இதுவும் மீளிணக்கத்திற்கான மற்றுமொரு அத்திவாரமாகும். பாதுகாப்புப் படைகளின் துணையோடு, இலங்கை அரசு தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சனத்தொகை மற்றும் கலாசார வரைபடத்தை மாற்றியமைக்க திட்மிட்டு செயற்பட்டு வருகின்றது என்ற சந்தேகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பலமாகவே உள்ளது.

பாராளுமன்றத்தில் இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல முறை பிரஸ்தாபித்திருந்தாலும் இந்த திட்டம் தங்கு தடையின்றி செயற்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்த சமயத்தில் இராணுவத்தினர் வசம் இருந்த பெரும் தொகை காணிகள், யுத்தம் முடிந்த பின்பும் அவர்கள் கைகளிலேயே தொடர்ந்தும் உள்ளன.

அதில் இருந்து சிறு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதென்னவோ மெய்தான். ஆனால் தமக்குச் சொந்தமான காணிகளை இராணுவம் தொடர்ந்தும் அவர்கள் வசம் வைத்துக் கொண்டிருப்பதன் ஒரே காரணமாக அகதி முகாம்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தவித்துக்கொண்டிருப்போர் பலர் உள்ளனர்.

அரசு இது பற்றி பரிந்துறைகள் செய்தும், பாராளுமன்றத்தில் இது பற்றி பேசியும், உயர் நீதிமன்றம் திர்ப்புக்களை அப்பாவித் தமிழ் மக்களுக்கு சார்பாக வழங்கியும், வடக்கில் வலிகாமம் மற்றும் கிழக்கில் சம்பூர் உட்பட பல பகுதிகளில் கைப்பற்றிய காணிகளை இராணுவம் விடாப்பிடியாக தம் வசம் வைத்த வண்;ணமே உள்ளனர். அது மட்டுமின்றி, யுத்தம் முடிவுற்றதன் பின்பும் பல புதிய காணிகளையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவம் மட்டுமன்றி பேரினத்தை சேர்ந்தவர்களும் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை கைப்பற்றியுள்ளதால், தமது வாழ்வாதார செயற்பாடுகள் மற்றும் வதிவிட தேவைகளுக்காக தம்முடைய பாரம்பரிய காணிகளை பெற்றுக் கொள்ள முடியாமல் அம்மகள் அகதிகளாக நிர்க்கதியாகி தவிக்கின்றனர்.

பேரினத்தைச் சேர்ந்த மக்கள் இல்லாத பகுதிகளிலும் அவர்களுடைய மதத்தை பரப்புவதற்காகவும் மேற்படி காணிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியதே. நிலைமை இவ்வாறிருப்பதால், இப்பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியமாகும். இல்லாவிட்டால் மக்கள் பிரிவுகள் இடையே பகைமையே அதிகரிக்கும்.

10. சிறு பான்மை இனங்களின் மதவழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் அவர்களுடைய கலாசார சின்னங்களுக்கு எதிராக பேரினத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல்களை மேற்கொள்வது இலங்கையில் இப்போதெல்லாம் ஒரு சாதாரண விடயமாக மாறிவிட்டுள்ளது.

இத்தாக்குதல்களை நடத்துபவர்கள், சட்டத்தின் கரம் தம்மை தீண்டவே தீண்டாது என்ற முழு நம்பிக்கையுடன் செயற்பட்டு வருவது தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசின் மௌனம், சட்டத்தையும் ஒழுங்கையும் நிறுத்த வேண்டிய அரசின் அமைப்புக்களின் செயலின்மை இது போன்ற துணிச்சலை அக்கயவர்களுக்கு தந்துள்ளது.

11. வடக்கு மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் அரசின் பாதுகாப்புப் படைகள் நடந்து கெண்ட விதத்தில் இருந்தே, அங்கு சிவில் கருமங்களுக்கு அவர்கள் இடையூறு செய்யும் விதத்தை உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்கூடாகக் கண்டு தமது அறிக்கைகளில் அவை பற்றி குறிப்பிட்டிருந்தனர்.

இப்பிராந்தியத்தில் உள்ள, அளவு மீறிய படை நடமாட்டம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12 இன் கீழ் ஜனாதிபதி அவர்களும் மாதந்தோறும் ஒரு பிரகடனத்தை மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நிறுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுருத்தி வருகின்றார்.

12. 17 வது சீர்திருத்தத்தை இரத்தாக்குவதன் ஊடாக அரசியல் யாப்பு சபையை கலைக்கப்பட்டதோடு அதைத்தொடர்ந்து 18 வது சீர்திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் நீதித்துறை, பொதுத் துறை, போலிஸ் திணைக்களம் போன்றவைகளின் சுயாதீனம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளதுடன் அவைகளின் கட்டுப்பாடு ஏகாதிபத்திய சாயல் துரிதமாக அதிகரித்து வரும் நிறைவேற்று அதிகாரத்தின் பிடிக்குள் இறுகி வருகின்றன.

13. இது போன்ற நிலைகளால், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பாதுகாப்பது தொடர்பான விடயங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை.

ஆர். சம்பந்தன்,
தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.


Similar posts

Comments are closed.