இலங்கை உயர்மட்டக்குழு ஜெனீவா புறப்பட தயார்

Written by vinni   // March 13, 2014   //

Geneva-flagஇலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி ஜெனீவா புறப்படவுள்ளதாக நம்பத்தகுந்த அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச வரைவின் கேள்வி நேரம் இம்மாதம் 20ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் தொடர்பாக உத்தேச வரைவில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. வடக்கு தமிழர்களின் மீள்குடியேற்றம், வடக்கில் இராணுவத்தின் அத்துமீறிய தலையீடு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள தாமதம் போன்ற சரத்துக்கள் முக்கியமாக அந்த உத்தேச வரைபில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்தக் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் மனித உரிமைப் பேரவையில் அறிக்கையொன்று வாசிக்கப்பட்டது. தற்பொழுதும் நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் சிலரை உள்ளடக்கிய மற்றுமொரு குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்ப அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

வெளிவிவகார அமைச்சை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் சிஷரும், சட்ட மா திணைக்களத்தினைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த உயர்மட்ட குழுவில் உள்ளடங்கவுள்ளதாக நம்பத்தகுந்த அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகள் விவகாரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் கேள்விகள் எழுப்பப்பட்டால், அரசாங்கத்தினால் புதிதாக அனுப்பப்படவுள்ள இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிய அதிகாரிகள் அதற்கு பதிலளிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.