ஜெனீவாவில் சாதிக்கலாம் என்றவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்: டக்ளஸ்

Written by vinni   // March 10, 2014   //

Douglas-Devanandaஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் தற்போது ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்’ என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேரூந்து நிலையத்தின் உப அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற நிலையப் பணியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வு காண்பதற்கு ஜெனீவா கூட்டத்தொடரே சிறந்தது என்றும் அதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்றும் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களது பிரச்சினையை தீராப்பிரச்சினையாக வைத்துக் கொண்டு அதன் மூலம் தமது அரசியலை தொடர்வதே அவர்களது நோக்கமாகும்.

முன்னர் அபிவிருத்தியல்ல உரிமையே முக்கியம் என்றவர்கள் தற்போது அபிவிருத்தியின் முக்கியத்துவம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றார்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

இதேவேளை, ‘இ.போ.ச வடபிராந்திய போக்குவரத்து சபையின் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம். நீங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டால் அதனால் எமது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், அதன் மூலம் உரிய தீர்வினைக் காணவும் முடியாது.

உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதே எமது நோக்கம் என்பதுடன் மக்களுக்கான சேவையை நீங்கள் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம்.

இதனிடையே இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலைக்கான வருவாயை பெருக்கி, அவற்றின் நிதி வசதியை மேம்படுத்தி முன்னேற்றும் வகையில் யாழ்.சாலையினை அதன் சாலை முகாமையாளரிடம் தற்காலிகமாக ஒப்படைக்குமாறு இ.போ.சயின் வடபிராந்திய பிரதான பொது முகாமையாளர் அஸ்ஹரிடம் ஏற்கனவே நான் பணிப்புரை விடுத்தேன்.

அந்த நடவடிக்கையினை இன்றைய தினமே ஆரம்பிக்குமாறும் கேட்டுக் கொண்ட அதேவேளை, இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இதைத் தொடர முடியும்’ எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்,சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, மத்திய பேரூந்து நிலைய சுற்றுமதில் அமைப்பது, மலசலகூடங்கள் கழிவுநீர் வாய்க்கால்களின் புனரமைப்பு, மத்திய பேரூந்து நிலைய வளாகத்தில் நடமாடும் வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, தனியார் பேரூந்து நடத்துநர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தமது கடமைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தினார்.

இதன்போது சாலை முகாமையாளர் குலபாலச்செல்வம், மத்திய பேரூந்து நிலையத்தின் பொறுப்பதிகாரி மரியவிமல்ராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


Similar posts

Comments are closed.