கால அவகாசத்தை இலங்கை பயன்படுத்தவில்லை –பிரித்தானியா

Written by vinni   // March 10, 2014   //

britonயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்திலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நான்கு மாத கால அவகாசம் வழங்குவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்திருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்ற போது ஆற்றிய உரையிலும் பிரதமர் கமரூன் இது குறித்து அறிவித்திருந்தார். நம்பகமான சுயாதீனமான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மார்ச் மாதம் 2ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிய காரணத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. தீர்மானத்தை சமர்ப்பித்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் ஏனைய நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொள்வதில் பிரித்தானியா தீவிரம் காட்டி வருவதாக பிரதமரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமர்வுகளில் பங்கேற்கும் சில நாடுகளிடம் பிரதமர் எழுத்து மூலம் ஆதரவு கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது,


Similar posts

Comments are closed.