ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை

Written by vinni   // March 9, 2014   //

Asia-Cup-Bangla10309ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று மிர்புரில் நடந்தது. இதில் இலங்கை அணியும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆலம் 114 (நாட் அவுட்) ரன்கள் விளாசினார். மிஸ்பா உல் ஹக் 65 ரன்களும், உமர் அக்மர் 59 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லகிரு திரிமன்னே, குசால் பெரேரா சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவருமே இலங்கையின் ஸ்கோரை மிக சீராக உயர்த்தினர்

இந்நிலையில் அணியின் ஸ்கோர் 50ஐ கடந்த போது துரதிர்ஷ்டவசமாக பெரேரா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சயீது அஜ்மல் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த குமார் சங்கக்கரா, முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் பரிதாபமாக வெளியேறினார். அடுத்து திரிமன்னே உடன் ஜெயவர்தனே ஜோடி சேர்ந்தார்.

இந்த கூட்டணி சற்றே நிதானத்தை கடைபிடித்து ஆடினர் அத்துடன் பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கை பலமாக எடுத்து கொண்ட அவர்கள், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். ஒருபுறம் ஜெயவர்தனே நிதானமாக ஆட, மறுமுனையில் திரிமன்னே பாகிஸ்தான் பந்து வீச்சை தவிடு பொடியாக்கினார்.

அரை சதம் கடந்த ஜெயவர்தனே 75 ரன்கள் எடுத்த நிலையில் முகமது டல்கா அவரை வெளியேற்றினார். அடுத்து ப்ரியஞ்சன் சொற்ப ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய திரிமன்னே, 106 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். இதில் 13 பவுண்டரிகளும் அடங்கும். சதம் அடித்த கையோடு அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 101 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த சதுரங்கா டி சில்வா மற்றும் மேத்யூஸ் இலங்கை அணியின் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். 22 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலங்கை வெற்றி இலக்கை எட்டியது.

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை, ஆசிய கோப்பையை தட்டிச் சென்றது. இதன்மூலம், இலங்கை அணி 5வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் ஒரு போட்டியில்கூட இலங்கை அணி தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டை கைப்பற்றிய மலிங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். திரிமன்னே தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Similar posts

Comments are closed.