தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை சர்வதேசம் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது – பிரபா கணேசன்

Written by vinni   // March 8, 2014   //

pirapakanesanஜெனீவா பிரேரணையின் மூலமாக அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை சர்வதேசம் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இன்று தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முப்பது வருட யுத்த காலத்தில் எமது மக்கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வந்தனர். இறுதிகட்ட யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இன்று யுத்தம் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இனப்பிரச்சினை சம்பந்தமாக எவ்விதமான தீர்வும் எட்டப்படவில்லை. மாறாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது

அண்மையில் 13வது திருத்த சட்டத்தையே அரசாங்கம் அப்புறப்படுத்த முயற்சித்தது. இருப்பினும், ஜெனீவா பிரேரணை மூலமாக எமது மக்களுக்கு விடிவு பிறக்கும் என்று நாம் நினைத்திருந்ததும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் நான் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்வதில்லை. தமிழ் மக்களை பாதிக்காத 18வது திருத்த சட்டம், வரவு செலவு திட்டம் போன்றவற்றிற்கு மட்டுமே நான் அரசாங்கம் சார்பாக வாக்களித்திருக்கின்றேன். ஒரு போதும் தமிழ் மக்களுக்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் நான் ஆதரவு அளித்ததில்லை

மாலையில் வரவு செலவு திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்து விட்டு இரவில் சபாநாயகர் வழங்கும் விருந்துபசாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்கின்றார்கள். நான் ஒரு போதும் கலந்து கொண்டதில்லை.

ஏனெனில் மனசாட்சிக்கு விரோதமாகவே நான் வாக்களித்துவிட்டு இதில் கலந்து கொள்ள முடியாது. இருப்பினும், கொழும்பு மாவட்ட தமிழ் கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்கு எனக்கு வேறு வழியில்லை.

இதுவே வடமாகாண சபையாக இருந்திருந்தால் அபிவிருத்தியை நாங்களே செய்து கொள்ளலாம். மேல்மாகாணத்தில் அரச நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு இப்படியான தந்திரோபாயங்களை உபயோகப்படுத்த வேண்டியுள்ளது. இன்று கடந்த மூன்று வருடங்களில் 15கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதியினை பெற்று தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யக்கூடியதாக இருந்துள்ளது.

அமெரிக்காவின் பிரேரணையின் மூலமாக அரசாங்கம் பொறிக்குள் அகப்பட்டு அதன் மூலமாக நியாயமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சர்வதேச உதவியுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நிறைவேற்றப்பட்டு அதிகார பரவலாக்கல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் அக்கறையாக இருக்கின்றேன்.

நான் மட்டுமல்ல அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

இருப்பினும், அமெரிக்காவின் பிரேரணையில் சர்வதேச விசாரணையோ அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதுவும் இல்லாதது நான் எதிர்ப்பார்த்ததே. வெறுமனே சர்வதேசத்தை நம்பி நாம் ஏமாந்து விடாமல் இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் உள்நாட்டில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக் வேண்டும்.

ஜெனீவா பிரேரணையும் சரி, சர்வதேச அழுத்தமும் சரி உள்நாட்டிலே அதை வைத்து அரசியல் செய்வதற்குத் தான் பிரயோசனமாக இருந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியாவின் உதவியுடன் உள்நாட்டில் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்காக அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கு தயாராக இருந்தால் அரசாங்க ஆதரவை விலக்கிக் கொண்டு இனப்பிரச்சினை தீர்விற்காக ஒன்று சேர தயாராக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.