போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வேண்டும் : ஐ.நா. மனித உரிமை பேரவையில் பசுமைத்தாயகம்

Written by vinni   // March 8, 2014   //

an copyஇலங்கைப் போர் முடிவடைந்த நாளிலிருந்தே இலங்கை மீது போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் பசுமைத்தாயகம் வலியுறுத்தி வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த 12 ஆவதுக் கூட்டத்தில் தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற 24 ஆவதுக் கூட்டம் வரையிலான 13 கூட்டங்களிலும், இடையில் நடந்த பல சிறப்புக் கூட்டங்களிலும் இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என பசுமைத்தாயகம் குரல் கொடுத்தது.

மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டம் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பசுமைத்தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதை மனித உரிமைப் பேரவையின்  அனைத்து உறுப்பினர்களுக்கும் கடந்த 27 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் போரின் போதும், போருக்குப் பிறகும் சிங்களப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளையும், அட்டூழியங்களையும் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள பசுமைத்தாயகம், ‘‘இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுபேற்றல் மற்றும் சமரசம் செய்தல் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு மதித்து செயல்படுத்தவில்லை.

இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும், அதிகார வர்க்கம் மற்றும் இராணுவ அதிகாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய அம்சங்கள் இல்லாதது குறித்தும் கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க நம்பகமான  விசாரணை அமைப்பை இலங்கை ஏற்படுத்தும் என்பது சந்தேகம் தான். எனவே இலங்கையின் இப்போதைய மற்றும் கடந்தகால போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவை குறித்து விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் ஆணையிட  வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது என்றார்


Similar posts

Comments are closed.