அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Written by vinni   // March 8, 2014   //

2360800-3x2-940x627ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளன. இந்த உத்தேச தீர்மானத்தின் வரைவு ஆவணம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தேச தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் அல்லது வாக்கெடுப்பு குறித்து அரசாங்கம் கவலை கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் புதிதல்ல எனவும் யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் எனவும், இது எதிர்பார்க்கப்பட்டதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.