ரஷ்யா மீது அதிகரிக்கும் நெருக்கடிகள்!

Written by vinni   // March 6, 2014   //

russiaஉக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண ரஷ்யாவுக்கு ராஜீய ரீதியாக நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

உக்ரைனின் கிரீமியா பிராந்திய ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ரஷ்யா உலகை ஏமாற்ற முடியாது என்று ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தலைநகர் கீவில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச அமைதிக்குழுவான “பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் அமெரிக்க தலைமை பிரதிநிதி டேனியல் பாயர் கூறுகையில்,

“கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தின் நிலைமையை ஆராய அமெரிக்கா மற்றும் 14 நாடுகள் இணைந்து அமைத்துள்ள ராணுவ கண்காணிப்புக்குழுவை அப்பகுதிக்கு 24 மணி நேரத்துக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் 57 உறுப்பு நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆயுதமற்ற இந்தக் குழு அங்கு அனுப்பப்படவுள்ளது.

உக்ரைனில் சிறுபான்மையினருக்கான உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்கும் விதமாக இந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஏற்கெனவே அங்கு முகாமிட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி ஒபாமா கூறுகையில்,

“”உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் மிகத் தீவிரமான பிரச்னைதான் என்றாலும் அதனை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என நம்புகிறோம்” என்றார்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கலுடன் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் கூறுகையில்,

“கிரீமியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை. பிரதமர் ஏஞ்செலா மெர்க்கலின் தூதுக் குழு யோசனையை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, துனிசியாவில் செய்தியாளர்களிடம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில்,

“ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு பயந்து, உக்ரைன் மீதான எங்களது நேர்மையான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை சோதனையை ரஷ்யா நேற்று நடத்தியுள்ளது. எனினும், இது வழக்கமான ஒன்றுதான் எனவும், உக்ரைன் பிரச்னைக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.