இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 83 இனக்கலவரமே பிரதான காரணம்!

Written by vinni   // March 4, 2014   //

Geneva-flagஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு ஐ. தே. க ஆட்சியில் இடம்பெற்ற 1983 இனக் கலவரமே பிரதான காரணமாகும். ஐதேக செய்த தவறுக்கு எமக்கு இன்று முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாக ஐ. ம. சு. மு தலைவர்கள் தெரிவித்தனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமல் விட்ட தவறை திருத்திக்கொள்ள ஜெனீவா மாநாட்டின் மூலம் ஐ.தே.க வுக்கு நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சர்வதேச மட்டத்தில் ஏற்படும் அழுத்தங்களை அநேக நாடுகள் எதிர்க்கட்சிகளின் உதவியுடன் முகம் கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய ஐ.ம.சு.மு தலைவர்கள், இறுதிக்கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நவநீதம்பிள்ளை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் பேசவில்லை என்றும் கூறினர்.

ஐ.ம.சு.மு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த்,

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணை மூலம் எதுவித பொருளாதாரத் தடையும் விதிக்க முடியாது.

ஐ.தே.க. ஆட்சியில் புலிகளுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச பாதுகாப்பான வலையமைப்பு தான் இலங்கைக்கு சர்வதேச தலையீட்டிற்கு வழி வகுத்தது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரும் நாடுகள் வட பகுதி அபிவிருத்திக்காக 5 சதம் கூட செலவிட்டது கிடையாது. மக்கள் செலுத்தும் வரி மூலமே இங்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அன்று ஐ.தே.க. சந்தர்ப்பவாத அரசியல் நடத்தியதாலே இன்று ஜெனீவாவில் எமக்கு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அமைதியாக உள்ள நாடுகளில் குழப்பத்தை தோற்றுவிப்பதையே மேலைத்தேய நாடுகள் செய்து வருகின்றன.

ஜெனீவாவில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்று முன்கூட்டி கூற முடியாது. தமது நாட்டில் அரசியல் நிலையை கருத்திற்கொண்டு இந்தியா முடிவு எடுக்கும் என்றார்.

திலங்க சுமதிபால எம். பி. கூறியதாவது:-

1983 கறுப்பு ஜுலை குறித்து. ஐ.தே. க. மன்னிப்பு கோர வேண்டும். அன்று ரணில் அமைச்சராக இருந்த போதே இந்த இனக்கலவரம் தூண்டிவிடப்பட்டது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்றுவரை அவர் வாய்திறந்துள்ளாரா? ஐ. தே. க. வின் தவறுக்கு நாமே இன்று பதில் அளிக்க வேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தம் குறித்து விசாரிக்க முன் 1983 கலவரம் குறித்தே முதலில் விசாரணை நடத்த வேண்டும்.

1983 கலவரம் குறித்து விசாரிக்கமாறு 20 லட்சம் மக்கள் கையொப்பமிட்டு கோர தயாராக உள்ளனர். முதலில் கறுப்பு ஜுலை குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உதய கம்மன்பில கூறியதாவது:-

ஐ.தே.க. ஆட்சியிலே மேலைத்தேய நாடுகள் இலங்கையுடன் நெருக்கமாக இருப்பதாகவும் ஒபாமாவுடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறாயின் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படுவதை ஐ.தே. க. நிறுதிக் காட்டட்டும்.

எமது படையினருக்கு எதிராகவே ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வரப்படுகிறது. படைவீரர்கள் தான் எமக்கு நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தித் தந்தனர் என்றார்


Similar posts

Comments are closed.