ஐநா தீர்மான வரைபில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை

Written by vinni   // March 4, 2014   //

United-Nations-Genevaஜெனிவாவில் தொடங்கியுள்ள ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நில நாடுகள் கொண்டுவரவிருக்கும் முன்வரைவின் நகல்கள் கசிந்திருக்கின்றன.

இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் இந்த முன்வரைவு, இது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால், இலங்கைப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த வழிமுறை மூலமாக தெளிவாகத் தெரியும் பலன் ஏதும் கிடைக்காத நிலையில், ஒரு சுயாதீனமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை வேண்டும் என்று மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்திருப்பதை இத்தீர்மான முன்வரைபு வரவேற்கிறது.

மேலும், இந்த முயற்சியில், ஆணையர், பொறுப்பு சுமத்துவது மற்றும் நல்லிணக்கத்தை எட்டுவது என்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கணித்து, இது குறித்து ஏற்பட்டுள்ள தேசிய அளவிலான வழிமுறைகளின் முன்னேற்றத்தையும் கண்காணித்து, இலங்கைப் போரின் இரு தரப்புகளும் போரில் இழைத்த்தாகக் கூறப்படும் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்கவேண்டும் என்றும் அது கோருகிறது.

இந்த விசாரணையின் முடிவில், ஆணையர் மனித உரிமைக் கவுன்சிலின் 27வது அமர்வில் ஒரு வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்றும், முழுமையான அறிக்கையை அதற்கடுத்த, அதாவது 28வது அமர்வில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கோருகிறது.

இதனிடையே, இலங்கை அரசும், இந்த குற்றச்சாட்டுகள் மீது ஒரு சுயாதீனமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை நடத்தவேண்டும் என்றும் அது கோருகிறது.

மேலும், இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணையத்தின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும் இலங்கை சரியாக அமல்படுத்தவேண்டும், 13 சட்டத்திருத்த்தின் அடிப்படையில், வட மாகாணத்துக்கு உரிய தேவையான வளங்களையும், ஆட்சி செய்ய தேவைப்படும் அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டும், அனைத்து மத வழிபாட்டிடங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை விசாரிக்கவேண்டும், இது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவேண்டும், மேலும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மதச்சிறுபான்மையினர், சிவில் சமூக உறுப்பினர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் இத்தீர்மானம் கோருகிறது.

இத்தீர்மான முன்வரைவு குறித்து புலம்பெயர் தமிழ்த் தன்னார்வக் குழுக்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசும் இத்தீர்மான முன்வரைவை நிராகரித்திருக்கிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சரவைக்காகப் பேசவல்ல அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, இலங்கைப் போரின் பின்னர் நல்லிணக்கம் போன்றவற்றுக்கு இலங்கை அரசாங்கம் தானே உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இப்படியான ஒரு தீர்மானத்துக்கு அவசியமே கிடையாது என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.