மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

Written by vinni   // March 4, 2014   //

pooமட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கெவிலியாமடுவில் தற்போதுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வதிவிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்குமார்கள் மற்றும் பெண்கள் உட்பட சிங்கள மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பட்டமொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையின் பிரதம குரு அம்பிட்டியே சுமனரத்ன தேரோ தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குமார்களும் கலந்து கொண்டார்கள்.

மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் முன்பாக கூடிய பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளுடன் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டு, மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தனர்.

போருக்கு பின்னர் அந்தப் பகுதியில் சிங்கள குடும்பங்களின் மீள் குடியேற்றத்திற்கு பிரதேச செயலக அதிகாரிகள் தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் வாசக அட்டைகளையும் அவர்கள் கொண்டு சென்றனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அதிகாரிகள், சட்ட விரோதமாக அரச காணிகளில் அத்துமீறி குடியேறியவர்களே வெளியேற்றப்படுவதாக கூறுகின்றனர்.

ஆர்பாட்ட பேரணி முடிவில் பௌத்த பிக்குமார்கள் மற்றும் கெவிலியாமடு கிராமத்தில் தற்போதுள்ள சிங்கள குடும்பங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று அரசாங்க அதிபர் பி. எம். எம். எஸ். சார்ள்ஸை சந்தித்து, கெவிலியாமடுவில் போருக்கு பின்னர் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு வதிவிடச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்த மனுவொன்றை கையளித்து இது தொடர்பாக கலந்துரையாடினர்.

குறித்த விடயங்கள் தொடர்பில் தான் ஆராய்ந்து கவனம் செலுத்துவதாக அரசாங்க அதிபரால் பதில் அளிக்கப்பட்டதையடுத்து, ஆர்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் மேற்கு எல்லையான கெவிலியாமடுவில் போருக்கு பின்னர் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பௌத்த பிக்குகளின் ஆதரவுடன் அரச காணிகளில் அத்து மீறி குடியேறுவதாக ஏற்கனவே மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

கெவிலியாமடு கிராமத்தில் அரச காணிகளில் அத்துமீறிக் குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக ஏற்கனவே பிரதேச செயலாளரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.