சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமாயின் எமக்கு நீதி கிடைக்கும்: பிரபா எம்.பி

Written by vinni   // March 3, 2014   //

downloadவட கிழக்கு மாகாண சபைகளை நாம் ஆட்சி செய்யக்கூடியதாக இருக்கின்றது. அதுதான் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே அதிகார பகிர்வாகும். இதனை முழுமையானதாக நான் பார்க்கவில்லை. ஜெனீவா மூலமாக எமது மக்களுக்கு சிறந்த தீர்வு பெறப்பட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமாயின் எமக்கு நீதி கிடைக்கும். அதேபோல் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். இவற்றில் நான் உறுதியாகவுள்ளேன்’ என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின்; தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் திங்கட்கிழமை (3) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

’13ஆம் திருத்த சட்டம் இல்லாதொழிக்க முற்பட்டபோது அதனை முறியடிக்க நாடாளுமன்றத்தில் நான் செயல்பட்டமை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் எப்படி தேவையோ, அதேபோல் அபிவிருத்தியும் தேவை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் அபிவிருத்தி என்று சொல்லுவது பாதைகள், பாலங்கள், கட்டிடங்கள் கட்டுவதை அல்ல. மாறாக எமது தமிழ் கல்வி அபிவிருத்தியை மட்டுமே குறிப்பிடுகின்றேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபை தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சர்வதேச பாடசாலையின் தரத்திற்கு கொண்டு வருவேன.

மேல்மாகாணத்தைப் பொறுத்தவரை எமக்கு ஆட்சி அமைக்க முடியாது. மாகாண முறைமையின் கீழ் இங்கு கல்வித்துறையை மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும். இன்று எனது வேட்பாளர்களுக்கு சர்வதேச பிரச்சினைகளை பேசி வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டாம் என தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

மேல்மாகாணத்தில் வெற்றிபெற்று முள்ளிவாய்க்கால் அவலத்தை போக்கவோ தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தத்தை இல்லாதொழிக்கவோ முடியாது. இன்று களம் இறங்கியிருக்கும் ஏனைய வேட்பாளர்களும் அவர்களது தலைவர்களும் 2011ஆம் ஆண்டு நகரசபை தேர்தலில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வாக்களிக்க சொன்னார்கள். பெறப்பட்ட வாக்குகள் எங்கே சென்றன? சர்வதேசம் திரும்பி பார்த்ததா?.

நான் நாடாளுமன்றத்தில் இருந்தாலும் மாகாணசபை உறுப்பினராகவும் செயல்பட வேண்டியுள்ளது. எந்தவொரு தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும் மாகாணசபையினூடாக செய்யக் கூடிய கல்வி அபிவிருத்தியைப்பற்றி அக்கறை செலுத்தாமல் பதவியில் கிடைத்த வரப்பிரசாதங்களையே அனுபவித்தார்கள்.

இவர்கள் சார்ந்த கட்சி தலைவர்களும் இவர்களை வழிநடத்தவில்லை. மீண்டும் வாக்குகளை கேட்பதற்கு இவர்களுக்கு தகுதியில்லை.

நான் பல கோடி ரூபாய்களுக்கு பாடசாலை அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளேன். கொழும்பு மாவட்ட பாடசாலைகளை சர்வதேச பாடசாலைகள் தரத்திற்கு அபிவிருத்தி செய்ய எனக்கு மாகாணசபை உறுப்பினர்களைப் பெற்றுக் கொடுங்கள்’ என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Similar posts

Comments are closed.