ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம்! கப்டன் ரகீம்

Written by vinni   // March 2, 2014   //

Cricket_2ஆசிய கிண்ணப் போட்டியில் வங்கதேசத்தை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.
ஆசிய கிண்ணப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய வங்கதேச அணி 47.5 ஓவரில் 222 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.

இந்த வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் அணித்தலைவர் முகமது கூறுகையில், இந்த வெற்றி எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

ஐ.சி.சி.யின் குழு உறுப்பினராக உள்ள அணிகளில் ஒன்றை முதல்முறையாக வீழ்த்தி இருக்கிறோம்.

ரசிகர்களும், நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். எங்கள் ரசிகர்கள் எப்போதுமே எங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள், எங்களை நேசிக்கும் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து வங்கதேச அணியின் அணித்தலைவர் முஷ்பிகுர் ரகீம், ஆப்கானிஸ்தானிடம் தோற்றது மிகவும் அவமானமாகும்.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 முறைகளிலும் நாங்கள் செயல் இழந்து விட்டோம்.

எங்களது பந்து வீச்சு முதல் 30 ஓவர் வரை சிறப்பாக இருந்தது. அதன் பிறகுதான் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர்.

254 ஓட்டங்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்குதான். கடைசி வரை வெற்றிக்காக போராடினோம்.

மூத்த வீரர்களான சகீப்–அல்– ஹசன், தமிம் இக்பால் இல்லாதது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது, இனிவரும் ஆட்டங்களில் முன்னேற்றம் அடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

 


Similar posts

Comments are closed.