தேர்தல் ஆணையாளரின் தடையை மீறுமாறு ஜனாதிபதி உத்தரவு!- சிங்கள இணையத்தளம்

Written by vinni   // March 2, 2014   //

Sri Lankan President Mahinda Rajapaksa gestures as he disembarks his airplane in Colomboஅரசியல் கட்சிகளின் தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதற்கு தடைவிதித்து தேர்தல் ஆணையாளர் பிறப்பித்த உத்தரவை மீறி செயற்படுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் உட்பட தனது ஆலோசகர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர், அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி, புலனாய்வு தகவல் பணியகத்தின் உதவி செயலாளர் சரத் சந்திர, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரான முன்னாள் பொலிஸ் அதிகாரி கே.பி.பி. பத்திரண, முன்னாள் பொலிஸ் மா அதிபரும் ஜனாதிபதியின் சிவில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் சந்திரா பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா ஆகியோருடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஹெந்தாவித்தாரண ஆகியோர் கலந்து கொண்டதுடன் தற்போதை பொலிஸ் மா அதிபர் இதில் கலந்து கொள்ளவில்லை.

தேர்தல் ஆணையாளர் எதனை கூறினாலும் தட்டிகள், பதாகைகள், சுவரொட்டிகளில் ஜனாதிபதியின் புகைப்படத்தை காட்சிக்கு வைப்பதில் எந்த தடையுமில்லை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இதன் போது கூறியுள்ளனர்.

ஜனாதிபதியின் புகைப்படங்களுடன் கூடிய வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களை அகற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களின் பொலிஸாருக்கு உடனடியாக உத்தரவிடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தென் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பொறுப்புகள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டோவுக்கு வழங்கப்பட்டதுடன் மேல் மாகாணத்திற்கான பொறுப்பு எஸ்.எம். விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து தென் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொடர்புக் கொண்ட சந்திரா பெர்ணான்டோ, தேர்தல் சட்டங்களை மீற ஆளும் கட்சியினருக்கு இடமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலை அறிவிப்பது மற்றும் அதனை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உள்ளது. எனினும் அது சட்டப் புத்தகங்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் போது, தேர்தல் சட்டங்களை மீறுமாறு ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் உத்தரவிடுகிறார்.

ராஜபக்ஷ மயப்படுத்தப்பட்டுள்ள நாட்டில் சட்டம் என்பது எதுவுமில்லை. உலகத்தை ஏமாற்றுவதற்காகவே தேர்தலை நடத்தி நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக காட்ட முயற்சித்து வருகின்றனர் என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.