ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்புகின்றன‌

Written by vinni   // March 1, 2014   //

_________________4d6fb2f7503dbமருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் கைகளின் மூலம் பாக்டீரியாக்கள் பரவுகின்றன என்ற போதிலும் மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்புவது தற்போது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜெனிவா மருத்துவமனைகளின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு உடல் பரிசோதனை மூலம் மருத்துவரின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்பும் பரப்பும் பாக்டீரியாக்களின் அளவைக் கண்டறிந்துள்ளனர்.

71 நோயாளிகளை மூன்று மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்கும்போது அவர்களில் ஒருவர் ஒவ்வொருமுறையும் சுத்தம் செய்யப்பட்ட ஸ்டெதாஸ்கோப்பையும், கையுறைகளையும் பயன்படுத்தியதன்மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நோயாளியின் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டபின் ஸ்டெதாஸ்கோப்பின் குழாய் மற்றும் அடிப்பகுதி, மருத்துவரின் கைகளின் நான்கு பகுதிகள் போன்றவற்றில் சேரும் பாக்டீரியாக்களின் அளவு தனித்தனியே கணக்கிடப்பட்டது. மருத்துவர்களின் விரல்நுனியும், ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்பகுதியும் பாக்டீரியாக்கள் அதிகம் சேரும் இடங்களாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

மேலும் இத்தகைய ஒப்பிடுதலை நேரடியாக நடத்திய முதல் ஆய்வு இதுவென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  ஒரு நாளில் தொடர்ந்து உபயோகிக்கப்படும் ஸ்டெதாஸ்கோப் பல நோயாளிகளின் தோல்பரப்பின் மீது நேரடியாக வைக்கப்படுகின்றது.

இதனால் எம்ஆர்எஸ்ஏ போன்ற கடுமையான தொற்றுவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இந்தக் கருவியில் சேர வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி மருந்து எதிர்ப்பு தன்மை உடைய பாக்டீரியாக்களும் நோயாளி பரிசோதனையின்போது இந்தக் கருவியில் படிய வாய்ப்புள்ளது என்பதால் பாக்டீரியாக்களைப் பரப்புவதில் ஸ்டெதாஸ்கோப்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தலைமை ஆராய்ச்சியாளரான டிடியர் பிட்டெட் தெரிவித்தார்.

தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.