ஜெனிவா பிரேரணையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் செல்வரட்னம் சிறிதரன்

Written by vinni   // February 26, 2014   //

sritharanஇலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க பிரேரணையானது, அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடியதாகவும், காரமானதாகவும் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் அதில் என்னென்ன உள்ளடக்கப்படப் போகின்றது என்பது பற்றி அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

அதேநேரம், இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு உரமூட்டக் கூடிய வகையில் தேவையான தகவல்களையும் விபரங்களையும் களத்தில் இருந்து திரட்டுவதில் அமெரிக்க தரப்பு இராஜதந்திரிகளும், உயர் மட்ட அதிகாரிகளும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்காக அவர்கள் பல தடவைகள் தெரிந்தும் தெரியாத வகையிலும் இலங்கையின் தலைநகரத்திற்கும், இறுதிச் சண்டைகள் நடைபெற்ற முல்லைத்தீவு உட்பட வடபகுதிக்கும் விஜயம் செய்து பலதரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கின்றார்கள். சந்தித்து வருகின்றார்கள். இந்தச் சந்திப்புகள் குறித்து வெளியில் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டிருப்பதாகவும் தெரிகின்றது. இருந்தும் சிலர் இந்தச் சந்திப்பு குறித்து, அரசியல் இலாபம் கருதியோ என்னவோ ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டிருப்பதாகவும், அது குறித்து அவர்களை அமெரிக்க இராஜதந்திரிகள் கடிந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

அதேநேரம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், போருக்குப் பிந்திய அபிவிருத்தி, இனங்களுக்கிடையிலான நல்லுறவு, நல்லிணக்கம், பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியில் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள மக்களின் பங்களிப்பு போன்ற பலதரப்பட்ட விடயங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக, சர்வதேச நாடுகள் – குறி;ப்பாக ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ள சர்வதேச நாடுகள் – பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதேவேளை, இந்த நாடுகள் போருக்குப் பிந்திய இலங்கையின் மீள் நிர்மாணத்திலும், அழிந்து போன பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதிலும் பெரும் பங்கெடுத்து உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நாடுகள் யுத்தம் நடைபெற்ற காலம் உட்பட நீண்டகாலமாக இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் உதவி வந்துள்ளன. இவ்வாறான நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளும், அரச உயர் மட்ட அதிகாரிகளும் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக அடிக்கடி விஜயங்களை மேற்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்படப் போகின்ற விடயங்கள் சரியாக இருக்கின்றனவா, அதற்கு ஆதரவளிக்கலாமா, அவ்வாறு ஆதரவு அளிப்பதாயின் எந்த அடிப்படையில் ஆதரவளிப்பது என்பதை முடிவு செய்வதற்காகவே இத்தகைய உண்மை நிலைமைகளைக் கண்டறிவதற்கான விஜயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அத்தகைய விஜயம் ஒன்றில் பங்கேற்றிருந்த மேலைத்தேய இராஜந்திரி ஒருவர், சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவரிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டு வரவுள்ள அமெரிக்காவும், ஏனைய சர்வதேச நாடுகளும் இங்கையின் நிலைமைகள் குறித்தும், இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டிய அல்லது அதனை சரியான வழியில் வழி நடத்துவதற்கு வேண்டிய விடயங்கள் குறித்து தீவிர அக்கறையைச் செலுத்தி செயற்பட்டு வருகின்றபோது, யுத்தத்திற்கு முகம் கொடுத்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சார்பில் செயற்பட வேண்டியவர்கள் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்திருக்கின்றது.
இந்தக் கேள்வி குறித்து நோக்குவதற்கு முன்பாக ஐநா மனித உரிமைப் பேரவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணைகள் குறித்து கவனம் செலுத்துவது முக்கியமாகின்றது.
ஐநா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐந மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையில், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறும் கடப்பாட்டை மேம்படுத்துதல் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்தது.
‘உலகின் பல பாகங்களிலுமிருந்து பரந்த அளவிலான ஆதரவைப் பெற்ற இந்தப் பிரேரணையானது, காத்திரமான பல படிமுறைகளைக் கோரி நிற்பதுடன், இவை இலங்கை மக்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்குப் பெரிதும் பங்களிக்கும். இந்தப் பிரேரணையில் கோரப்பட்டுள்ளதற்கு அமைவாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறும் கடப்பாடு தொடர்பில் நடைமுறைக்கிடப்படும் படிமுறைகளைக் கொண்ட முழுமையான செயற்திட்டத்தைத் தயாரிக்குமாறும், இந்த முக்கியமான குறிக்கோள்களை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தில் உள்ள பங்களார்களளுடன் இணைந்து அர்த்தமுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க செயலாற்றுமாறும் இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா கோருகின்றது. இவை தனது மக்கள் அனைவருக்கும் பிரகாசமான அமைதி நிறைந்த, நிலையான எதிரகாலத்தைப் பெற்றுத் தருகின்றதான, இலங்கையின் முயற்சிகளில் முக்கிய பாகமாகத் திகழும். இந்த முக்கியமான நடவடிக்கையில் இலங்கையுடன் கைகோர்த்து நிற்க நாம் தயாராக உள்ளோம் என்று இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டவுடன், அது குறித்து கருத்து வெளியிட்டிருந்த தேசிய பாதுகாப்புப் பேரவையின் பேச்சாளர் டொமி வீட்டர் தெரிவித்திருந்தார்.

2013 ஆம் ஆண்டு பிரேரணை

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டாவது தடவையாகக் கொண்டு வந்த பிரேரணை 2012 ஆம் ஆண்டு பிரேரணையை அடியொட்டியே அமைந்திருந்ததாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
‘இலங்கை அரசாங்கம் தானே நியமித்திருந்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவற்றை அர்த்தமுள்ள வiகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் நல்லிணக்கம், பொறுப்பு கூறுதல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நல்லாட்சி போன்ற விடயங்களில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும்.
‘நீண்ட காலமாகக் கவனிக்கப்படாமலிருக்கின்ற அல்லது உரிய நடைமுறைகளை மேற்கொள்ளாதிருக்கின்ற நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறுதல் என்பவற்றைப் பொறுத்தமட்டில், தனது குடிமக்களுக்குக் கடமைப்பட்டிருக்கின்ற வகையில் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறும் கடப்பாட்டை (2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ள) இந்தத் தீர்மானம் மீண்டும் வலியுறுத்துகின்றது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், மூன்று தசாப்த யுத்தத்தின் பின்னர், முன்னோக்கிச் செல்லும் வகையில், இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியிருக்கின்றது.

இந்த இரண்டு பிரரேரணைகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்ற போதிலும், அமெரிக்காவின் முன்மொழிவில், போருக்குப் பின்னரான நல்லிணக்கம், மீறப்பட்ட மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்பு கூறுதல், சீர் செய்யப்பட வேண்டிய சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகத்தைப் பேணுதல் போன்ற விடயங்கள் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட்டிருந்த போதிலும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயம் விசேடமாகக் கவனத்திற் கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

போராடும் திசையறியாத அவல நிலை

இனப்பிரச்சினை காரணமாகவே யுத்தத்தை நோக்கி நாடு இழுத்துச் செல்லப்பட்டது. யுத்தம் காரணமாகவே நாட்டில் பேரழிவுகள் ஏற்பட்டன. மனித உரிமைகள், சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் போன்ற இன்னோரன்ன விடயங்களும் சீர்குலைய நேரிட்டது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வு ஒன்றே, இனப்பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் முடிவு காண்பதற்குரிய வழியாகும்.
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தொடர்ச்சியாகக் கொண்டு வருக்pன்ற பிரேரணைகளுக்கு பிராந்திய அரசியல், இராணுவ பொருளாதார உள்நோக்கங்கள் இருக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால், அமெரிக்காவின் செயற்பாடுகளை, யுத்தத்தி;னால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது, சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்.

அந்நியரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது முதல், பெரும்பான்மை இனத்தவர்களினால் தொடர்ச்சியாக அரசியல் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்கள், அந்த அடக்குமுறையில் இருந்து மீள்வதற்கு முடியாதவர்களாக மாறியிருக்கின்றார்கள். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்காக, அஹிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போரடிய தமிழ் மக்கள், இன்று போராடுகின்ற திசையறியாமல், சர்வதேசத்தை நம்பியிருக்க வேண்டிய அவல நிலைக்குள் வீழ்ந்து கிடக்கின்றார்கள். பிறருடைய அனுதாபத்திலும், அவர்களின் உதவி ஒத்தாசைகளிலும் தங்கியுள்ள அவர்கள் தமக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடனடி நன்மைகளையும், குறுகிய அரசியல் நோக்கங்களையும் கைவிட்டு, நீண்டகால இருப்பையும், தேவைகளையும் கருத்திற்கொண்டு தீர்க்கதரிசனத்துடன் செயற்பட வேண்டியிருக்கின்றது.

எனவே, மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரை இலக்கு வைத்து, அமெரிக்காவும், ஏனைய சர்வதேச நாடுகளும் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களின் அரசியல் தலைவர்களாக இருக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இந்த முக்கியமான வாய்ப்பை எந்த வகையில் பயன்படுத்துவதற்கு முனைந்திருக்கின்றார்கள் என்பது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
சந்தர்ப்பம் பயன்படுத்தப்படுகின்றதா?
வெளிநாட்டு இராஜதந்திரிகளும், ஐநா சபை அதிகாரிகளும், சர்வதேச முக்கியஸ்தர்களும் நாட்டின் வடபகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்ப்டமாட்டார்கள் என்று வெளிப்படையாகவே அறிவித்திருந்த அரசாங்கம் தனது நிலைப்பாட்டைப் படிப்படியாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக மடை திறந்த வெள்ளத்தைப் போன்று சர்வதேச அரசியல் முக்கியஸ்தர்களும், இராஜந்திரிகளும் வடமாகாணத்தி;ற்கு விஜயம் செய்து சிவில் சமூகத்தி;னரையும், தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களையும், நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்து வருகின்றார்கள். அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகள், அபிலாசைகள், தற்போது உள்ள அரசியல் போக்குகள் என்பவற்றை அலசி ஆhhய்ந்து செல்கின்றார்கள். அவர்களின் முயற்சிகளுக்குத் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், சிவில் சமூகத்தினரும்; பேருதவி புரிந்து வருகின்றார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை.
ஆனால், ஒரு முகப்படுத்தப்பட்டதாக, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக நலன்களை உள்ளடக்கிய வகையில் நீண்டகால தேவைகளை உள்ளடக்கிய தீர்க்கரிசனத்துடன் கூடிய வழிகாட்டல்களை அல்லது செயற்பாட்டுத் தேவைகளை அவர்கள் எடுத்துரைப்பதாகத் தெரியவில்லை. ஆளாளுக்கு தங்களளவில் தெரிந்தவற்றையும், தங்களுக்குத் தோன்றியவற்றையும் உடனடித் தேவைகளையும், முதன்மைப்படுத்தி, மக்களின் அபிலாசைகளை எடுத்துரைக்கின்றார்கள். அரசியல் தீர்வு பற்றியும், இடைக்காலத் தீர்வு பற்றியும் அவர்கள் பேசியிருக்கி;ன்றார்கள். ஆனால், தற்போது கிட்டியுள்ள இலங்கை அரசு மீதான ஐநா மனித உரிமைப் பேரவையில் வரவுள்ள சர்வதேச அழுத்தம் என்ற சந்தர்ப்பத்தைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்டகால நன்மை பயக்கத்தக்க திசை நோக்கி நகர்த்தும் வகையில் கையாள்கின்றார்களா என்பது தெரியவில்லை.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும், இதனை சர்வதேச விசாரணையொன்றின் மூலம் அனைத்துலக சமூகம் வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்றும் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற படுகொலைகள், மீறப்பட்ட மனித உரிமை மீறல்கள் என்பவற்றை விசாரணை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிப்பதாகவும் வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை சர்வதேச சமூகத்திற்குக் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணை ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடருக்கான ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அரசியல் தீர்வு பற்றி; இந்தப் பிரேரணையில் குறிப்பி;டப்படவில்லை.
இந்தப் பிரேரணையின் நோக்கம் முழுமையாக வேறாக இருந்தது என்ற கூறினாலும்கூட, அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வேறு ஒரு தீர்மானத்தின் ஊடாகவாவது கொண்டு வந்திருக்கலாம். அவ்வாறு வடமாகாண சபையில் கொண்டு வருவதற்கு இன்னும் சந்தர்ப்பம் வரவி;ல்லை அல்லது காலம் கனியவில்லை போலும்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை முதலில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதையும் நல்லிணக்கத்தையும் முக்கியமாகக் கொண்டிருந்த போதிலும், அதற்குப் பின்னர் இரண்டாம் முறையாகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், அதனுடன் இணைந்ததாக வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இம்முறை, தற்போது எரியும் பிரச்சினையாகியுள்ள காணிகள் கையகப்படுத்துவதும், இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கியத்துவம் பெறும் என்று ஊகம் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது திரட்டப்பட்ட தகவல்கள், தரவுகள அடிப்படையாகக் கொண்டுள்ள அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரேரணை அமைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பது தெரியாத போதிலும், அரசியல் தீர்வுக்கான அவசியத்தை இந்தப் பிரேரணையில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இன்று பல்வேறு பிரச்சினைகளாக ஆலமர விழுதுகளைப் போன்று இனப்பிரச்சினையே கிளை பரப்பியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் அனைத்துப் பிரச்சி;னைகளுக்கும் தீர்வு கிடைப்பதற்கு வழிபிறக்கும் என்பதில் சந்தேகமி;ல்லை.

தமி;ழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள்

ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இந்த முறையும் அரசுக்கு எதிராகப் பிரேரணையொன்றைக் கொண்டுவரவுள்ளது என்ற தகவல் முன்கூட்டியே உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உரிய முன் ஆயத்தங்களைச் செய்ததாகவோ அல்லது அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டதாகவோ தெரியவில்லை.
ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை முன்னிட்டு பலதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் ஜெனிவா உட்பட பல இடங்களுக்கும் சென்றுவிட்டு பெப்ரவரி முற்பகுதியில் நாடு திரும்பியிருந்தனர். ஆனால், இவவ்hறான சந்திப்புகளுக்காக அவர்கள் செல்வதற்கு முன்னால், அங்கு செல்வது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனக்குள் கலந்து பேசவுமில்லை. கலந்;தாலோசிக்கவுமில்லை.
இவ்வாறான சந்திப்புகளுக்காகச் சென்று திரும்பிய பின்னர்தான் கடந்த வாரம் தமி;மித்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் கொழும்பில்; கூடியிருந்தது. இந்தக் கூட்டத்திற்கும் ஐந்து உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் திட்டமிட்ட வகையில் அல்லது முன்னேற்பாட்டுடன் நடத்தப்பட்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது. இவ்வாறு உறுப்பினர்களின் அரைகுறை பிரசன்னத்துடன் நடைபெற்ற கூட்டத்தி;ல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அதிரடி நடவடிக்கையாக ஜெனிவாவில் ஆதரவு திரட்டுவதற்காக சிறப்புக் குழு நியமனமானது என்று கொட்டை எழுத்துக்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
உண்மையில் அந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குச் செல்வதைப்பற்றி பேசப்பட்டிருக்கின்றது. யார் யார் அதில் இடம்பெற வேண்டும். அந்தக் குழு அங்கு சென்று என்ன செய்யப் போகின்றது, யார் யாரை முக்கியமாகச் சந்திக்கப் போகின்றது என்ன விடயங்கள் பற்றிப் பேசப் போகின்றது என்பது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனையே இந்தக் கூட்டத்தி;ல் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
அடுத்த மாதம் தான் ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெறும் என்றாலும்கூட, மார்ச் 3 ஆம் திகதி அந்தக் கூட்டம் ஆரம்பமாகவிருக்கின்றது. இலங்கை விவகாரம் மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில்தான் எடுக்கப்படவுள்ளது என்றாலும் கூட, ஜெனிவா கூட்டம் ஆரம்பமாவதற்கு ஒருவார காலம் இருக்கின்ற நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ‘அதிரடியாக’ சிறப்புக்குழு நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கி;ன்றது. எனினும் அன்றைய கூட்டத்தி;ல் அந்தக் குழுவில் யார் யார் அங்கம் வகிக்கப் போகின்றார்கள் என்பது ஆராயப்படவுமில்லை. அதுபற்றி தீர்மானிக்கப்படவுமில்லை. இந்தக் குழு உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள், அவர்கள் என்னென்ன விடயங்கள் பற்றி பேச வேண்டும், ஜெனிவாவில் யார் யாரை எங்கு வைத்து எப்போது சந்தித்துப் பேச வேண்டும் என்ற முக்கியமான விடயங்வகள் குறித்து எப்போது ஆராயப்படும் என்பது பற்றியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஐநா சபை ஒரு புறமும், அமெரிக்கா ஒரு புறமும், ஐநா மனித உரிமைப் பேரவை உறுப்பினர்களான நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் மறுபுறமுமாக பலதரப்பினரும் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பிரச்சினையின் முக்கிய பங்காளிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போதுதான் சிறப்புக்குழு அமைப்பது பற்றி ஆலோசித்திருக்கின்றது. இந்த மந்த கதி குறித்து பாதிக்கப்பட்ட மக்களே கவனத்தி;ற் கொண்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வேகமூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


Similar posts

Comments are closed.