முல்லைத்தீவு தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணையுமாறு துண்டுப்பிரசுரம்

Written by vinni   // February 24, 2014   //

mullai_army_005-450x340முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணையுமாறு கோரும் சுவரொட்டிகளை இராணுவத்தினர் ஒட்டி வருகின்றனர்.

அதன்படி இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியில் இணைந்துகொள்வதற்கு ஆர்வமுடையவர்கள் இணைந்து கொள்ளலாம் என்ற துண்டுப்பிரசரங்கள் நேற்று முன்தினம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமணமாகாத 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 8ஆம் தரம் அல்லது 9ஆம் தரத்தில் சித்தி பெற்றிருப்பதுடன், விளையாட்டுத்துறை, பொறியியல், உள்ளிட்ட வேறு துறைகளில் தேர்ச்சியுள்ளவர் விண்ணப்பிக்க முடியும் எனவும் அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆங்கில அறிவு, கணணி அறிவு என்பன விஷேடமாக கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. அத்துடன் மகளிர் படையணியில் இணைந்து கொள்ளும் தொண்டர் சிப்பாய்க்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வரை கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி, மருத்துவம், வான்மை விருத்தி பயிற்சி என்பனவும் வழங்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கிறது.

15 வருடகால சேவையின் பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும். எனவே மகளிர் படையணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தமது விண்ணப்பப்படிவங்களை 591ஆவது படையணி – முல்லைத்தீவு, 592ஆவது படையணி நாகன்சோலை, 593ஆவது படையணி-நாயாறு, 641ஆவது படையணி-பதுக்குடியிருப்பு தெற்கு, 642ஆவது படையணி-ஒட்டுசுட்டான், 643ஆவது படையணி-முத்தையன்கட்டு, 681ஆவது படையணி- முள்ளிவாய்க்காள் மேற்கு, 682ஆவது படையணி – புதுக்குடியிருப்பு, 683ஆவது படையணி – உடையார்கட்டு ஆகிய படைத்தலைமையகங்களில் கையளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திலும், 4ஆம் திகதி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும், 5ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் இது தொடர்பாக நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் இராணுவத்தில் இணையுமாறு தங்களை வலுக்கட்டாயப்படுத்துவதாகவும் அதில் இருந்து தாம் மீள முடியாத நிலையில் உள்ளதாகவும் அங்குள்ள பெண்கள் அண்மையில் விவசாய அமைச்சரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.