பான் கீ மூன் ஒரு எழுதுவினைஞரைப் போன்றவர்

Written by vinni   // February 24, 2014   //

Ban Ki-moonயுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையை இலங்கையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அவருக்கு அவ்வாறான நிறைவேற்று அதிகாரம் எதுவும் கிடையாது என்று ஆளும் கட்சியின் அங்கத்துவ கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். அந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரின் அந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படாவிட்டாலும் இலங்கை அதற்கு சம்மதிக்கவில்லையாயின் ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் எதனையும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு இவ்வாறு கொண்டுவந்தனர்.

ஆனால் இஸ்ரேல் இணங்காமையினால் எதையும் செய்யமுடியாது போனது இதேவேளை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வன்னிக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை அனுப்பி பிரபாகரன் உள்ளிட்டவர்களை பாதுகாப்பதற்கு சதிஷ் நம்பியார் முயற்சித்தார். ஆனால் அப்போது ஜனாதிபதி ஜோர்தானுக்கு சென்றிருந்ததால் பான் கீ மூனால் இலங்கைக்கு 17 ஆம் திகதி வரமுடியவில்லை. எனவே அவர் 21 ஆம் திகதி வருகை தந்தார். அவர் வரும்போது அனைத்தும் முடிந்திருந்தது. அப்போது அவருடன் பொறுப்புக்கூறல் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாட்டில் சர்வதேச பொறிமுறை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. பொறுப்புக்கூறல் தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். திருகோணமலை மாணவர் கொலை தொடர்பாக விசாரணைகள் நல்லிணக்க ஆணைக்குழு என்பவற்றை குறிப்பிடலாம். கடந்த காலங்களில் பாகிஸ்தான் நேபாளம் மாலைதீவு பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இவ்வாறு ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தினர். தற்போது அந்த விடயத்தை இலங்யைில் ஏற்படுத்த முயற்சி்க்கின்றனர். பான் கீ மூன் எவ்வித அதிகாரமுமற்ற ஐ.நா. பாதுகாப்பு மற்றும் பொதுச் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றுபவர் மட்டுமேயாகும். அவர் ஒரு எழுது வினைஞரைப் போன்றவர். அவரினால் நிறைவேற்று தீர்மானங்களை எடுக்க முடியாது என்றார்.


Similar posts

Comments are closed.