பாகிஸ்தானின் புனெர் மாவட்டத்தில் இன்று குண்டுவெடிப்பு : அரசியல் தலைவர் உள்பட 3 பேர் பலி

Written by vinni   // February 22, 2014   //

Pakistanவடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், புனெர் மாவட்டத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாயினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “பாகிஸ்தானின் தேசியவாத குவாமி வாடன் கட்சித்தலைவர் அடலத் கானின் வாகனத்தை குறிவைத்து,  ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அடலத் கானுடன், உடனிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையில், பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பு ஒன்று அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தலிபான் எதிர்ப்பு அமைப்பு நடத்திய மாநாட்டிற்கு அடலத் கான் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இவ்வமைப்பின் தலைவர் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தலிபான்கள் இக்குண்டுவெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் 2007ம் ஆண்டு முதலே பாகிஸ்தான் அரசுக்கெதிராக குண்டிவெடிப்புகள் மற்றும் பல தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் இந்த அமைப்பின் மீதும் சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்திருந்த தலிபான் அமைப்பு பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக ஜனவரி 29 அன்று அவர்கள் கடத்தி வைத்திருந்த 23 ராணுவ வீரர்களை கொன்றுவிட்டனர்” என்று தெரிவித்தனர்.

தற்போது தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில் தான், பெண்கல்வி போராளியான மலாலா யூசுப்சாய் தலிபான்களால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.