ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாராளுமன்றில் வாக்கு வாதம்

Written by vinni   // February 20, 2014   //

art.mahinda.rajapaksa.afp_.gi_ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் பாராளுமன்றில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள், சென்ற நாடுகள் மற்றும் அதற்காக செலவிட்ட பணம் ஆகியன தொடர்பிலான தகவல்களை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பாராளுமன்றில் கோரியுள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றில் விவாதம் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் நடத்தை பற்றி கேள்வி எழுப்பப்படவில்லை எனவும், அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றியே கேள்வி எழுப்பபட்டது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தின் 42ம் பிரிவின் அடிப்படையில் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் நடத்தை பற்றி கேட்கவில்லை, அவரது பயணங்கள் பற்றியே கேட்கப்படுகின்றது என அவரும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கேள்வி தொடர்பில் ஏற்கனவே இரண்டு தடவைகள் விளக்கம் கோரப்பட்ட போதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் கால அவகாசம் கோரி வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.