திருகோணமலை முற்றவெளி மனித எழும்பு துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை வேண்டும் – செல்வம் எம்.பி

Written by vinni   // February 18, 2014   //

selvam_adaikalanathan-150seithyதிருகோணமலை முற்றவெளி மைதானத்தில் வெளிவந்துள்ள மனித எலும்புத்துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலை வெளிவந்தால் மட்டுமே வடக்கின் இனப்படுகொலை தெரியவரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.   வடக்கு மாகாணம் முற்றிலும் எலும்புக்கூடுகளால் நிறைந்துள்ளது.காணாமல் போனோர் வடக்கிலேயே புதைக்கப்பட்டு விட்டனரா எனவும் கேள்வி எழுப்பினார்.   இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,   திருகோணமலையிலும் மனித எழும்புத் துண்டுகள் ஒரு தொகை வெளிவந்துள்ளன. இவை சாதாரணமாக கருதப்படக்கூடிய விடயமல்ல. வடக்கில் இடம்பெற்ற கொடுமைகளின் மற்றும் யுத்த குற்றங்களின் ஆதாரமாகவே இவை அமைந்துள்ளன.

இவ்வாறு வடக்கில் இன்றும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் புதைக்கப்பட்டிருக்கக்கூடும். யதார்த்தமாக கட்டுமானப் பணிகளையும் தோண்டல் வேலைகளையும் மேற்கொள்ளும் போதே இவை வெளிவரும்.   திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் வெளிவந்துள்ள இந்த மனித எலும்புத்துண்டுகள் விடயத்தில் நீதிமன்றம் உடனடியாக ஆராய உத்தரவினை வழங்க வேண்டும்.

இதன் பின்னணி என்னவென்பதை அரசாங்கம் உடனடியாக கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் இவ் விடயம் தொடர்பிலும் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்.   மேலும் வடக்கு மாகாணம் இன்று மனித எலும்புக் கூடுகளின் மேலேயே பரவிக்கிடக்கின்றன. வடக்கில் தமிழ் மக்களின் நிலைமை இப்போது சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துவிட்டது.   இறுதி யுத்தத்தில் காணாமல் போன தமிழ் மக்களின் உடல்கள் இன்று மண்ணடியில் புதைந்து கிடக்கின்றன. அதுவே உண்மையாகும்.   இராணுவ அடக்கு முறைகளை நாம் தொடர்ந்தும் சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தி வரும் நிலையில் இச் சம்பவமும் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நல்ல சான்றாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.