ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: விக்னேஸ்வரன்

Written by vinni   // February 18, 2014   //

vikneswaranவடக்கு மாகாணசபை நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தீர்வுகேட்டு நிற்பதாகவும் அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து பிபிசி செய்தியாளருக்கு அளித்திருந்த செவ்வியொன்றில் கூறியிருந்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லாதபோது, அது தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவதில் என்ன தவறு என்றும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணசபைக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

‘எங்களோடு (ஜனாதிபதி) பேச்சுவார்த்தை நடத்துகின்றபோது, எங்களுக்கு பலவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் எங்களுக்கு கடைசியில் எதுவுமே கிடைக்கவில்லை. எங்களோடு, நல்லபடியாக, அழகாக பேசினார். ஆனால் எதனையுமே இதுவரை வழங்கவில்லை’ என்றார் விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாணசபையின் நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி பிபிசி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே விக்னேஸ்வரன் இந்தக் கருத்தைக் கூறினார்.

இறுதிக்கட்டப் போரின்போது, என்னென்ன போர்க்குற்றங்கள் நடந்தன என்பதை அறிவதற்காக அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்றும் வடக்கு முதலமைச்சர் இதன்போது விசனம் தெரிவித்தார்.

‘வினை விதைத்தவர்கள் வினை அறுப்பர்’
‘இறுதிக்கட்டப் போர் பிரதேசத்துக்குள் இருந்து வெளியில் வந்த மக்களுக்கு, அங்கு என்னவெல்லாம் நடந்தன என்பது தெரியும். அதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தி உண்மை என்ன என்று தெரிந்துகொள்ளாமல், எமது அரசாங்கம் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.. எமது இராணுவத்தினர் நல்லவர்கள்.. என்று சொல்லிவந்தாலும் உண்மை என்பது ஒருபோதும் இல்லை என்று ஆகமுடியாது தானே’ என்றார் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்.

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதற்கான உரிமை உள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். எவராவது குற்றம் புரிந்திருந்தால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டும்’ என்றும் கூறிய விக்னேஸ்வரன், வினை விதைத்தவன் வினை அறுப்பான்..’ என்ற அர்த்தப்பட சிங்களப் பழமொழி ஒன்றையும் கூறிக்காட்டினார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகின்ற முதலமைச்சர், வடக்கில் உள்ள இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை தொடர்பில் ஜனாதிபதியும் ஜனாதிபதியின் செயலாளரும் ஆளாளுக்கு முரண்பட்டத் தகவல்களைக் கூறுவதாகவும் தெரிவித்தார்.

‘இங்கு இராணுவத்தினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று நாங்கள் கூறுகின்றோம். ஆனால், எமது ஜனாதிபதியோ இங்கு யாழ்ப்பாணத்துக்கு வந்து 12 ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என்கிறார். அதற்கு மறுநாளே, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க 70 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றார்’ என்றும் முதலமைச்சர் கூறினார்.

‘மக்களின் காணிப் பிரதேசங்களை எல்லாம் இராணுவம் எடுத்துக்கொண்டு காய்கறி பயிர் செய்கிறது. மீன்பிடியிலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர். எங்கள் மக்களுக்கு அவர்கள் இடமளிப்பதில்லை. ஏ 9 வீதியில் போய் பார்க்கும்போது, கடைகளை வைத்திருப்பவர்கள் யார் என்றால் இராணுவத்தினர் அல்லது இராணுவத்தின் உறவினர்கள் அல்லது அவர்களின் நண்பர்கள். வடக்கு மாகாணம் முழுமையாக இராணுவத்தின் அதிகாரத்துக்குக் கீழ் இருக்கும்போது, நாங்கள் எப்படி எங்களின் வேலைகளை முன்னெடுத்துச் செல்வது’ என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது செயற்படுகின்ற விதம் குறித்து பெரும்பான்மை சிங்கள மக்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் இருப்பதாகவும் பிபிசியிடம் கூறினார்.

‘நாட்டை பிரிப்பதற்காக அல்ல, அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறே நாங்கள் கேட்டுவருகின்றோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், அந்தப் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்திடம் கொண்டுசென்று தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.


Similar posts

Comments are closed.