அன்புள்ள யுவராஜ்! கிங்பிஷர் ஊழியர்களின் மடல்

Written by vinni   // February 16, 2014   //

yuvaraj_singh_001ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட வேண்டாம் என்று யுவராஜுக்கு, கிங்பிஷர் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கை, விஜய் மல்லையாவின் ஐ.பி.எல். அணியான பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

ஐ.பி.எல். ஏலத்தில் இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச தொகையாகும்.இந்நிலையில் கிங்பிஷர் நிறுவனத்தின் ஊழியர்கள் பெங்களுர் அணிக்காக விளையாட வேண்டாம் என்று வலியுறுத்தி யுவராஜ் சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.

அதில், அன்புள்ள யுவராஜ், கிங்பிஷர் விமான நிறுவனத்தின் ஊழியர்களாகிய நாங்கள் அனைவரும் உங்களது தீவிர ரசிகர்களாவோம்.

அதுமட்டுமல்லாது, நீங்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சமயம் விரைவில் நீங்கள் நலம்பெற்று வந்த செய்தியைக் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

நடக்கவுள்ள ஐ.பி.எல் போட்டியில் விளையாட தங்களை ரூ.14 கோடிக்கு எங்களது நிறுவனம் ஏலம் எடுத்ததை கேள்விப்பட்டபோது நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

ஏனெனில் எங்கள் அனைவருக்கும் கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இக்காரணத்தால் நாங்கள் அனைவரும் கடன் நெருக்கடியில் தவிக்கிறோம். எனவே தாங்கள் எங்களுக்காக இப்போட்டியில் விளையாடவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இக்கடிதம் யுவராஜ் சிங்கின் பார்வைக்கு சென்றது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை. கடந்த சில காலமாக சர்வதேச போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வரும் யுவராஜ் சிங்குக்கு, ஐ.பி.எல். போட்டிகள் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.