சமாதான பேச்சுவார்த்தை தோல்வி – ஒபாமா எச்சரிக்கை

Written by vinni   // February 16, 2014   //

syria_peace_talk_003சிரியாவுடன் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சிரியாவுக்கான ஐ.நா. தூதர் லக்தர் பிராகிமி ஜெனீவாவில் தெரிவித்தார்.

சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 1,36,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் லக்தர் பிராகிமி நேற்று அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது,

“சிரியாவில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தப் போர் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை உணர வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சிரியா எதிர்க்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லூயேசபி கூறும்போது, “சிரியா விவகாரத்துக்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் வீணானது” என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் சில இடைநிலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு ராஜதந்திரத் தீர்வு நோக்கி நிலைமையை நகர்த்த நாம் அனைவரும் தொடர்ந்து வேலை செய்யப் போகின்றோம் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.