இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை! பிரதமருக்கு நெருக்கடி கொடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Written by vinni   // February 16, 2014   //

srilanka flgஇலங்கை அரசு மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா தனியாக கொண்டு வர பிரதமருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடத்தப்பட்ட இன அழிப்புப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்கள அரசு, அதன் செயலுக்காக சிறிதும் வருந்தியதாக தெரியவில்லை. மாறாக சர்வதேச அமைப்புகளையும், உலக நாடுகளையும் ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

2009 ம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை வடக்கு மாவட்டத்தில் கிளிநொச்சியைக் கைப்பற்றிய சிங்களப்படைகள், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை முல்லைத்தீவின் குறுகியப் பரப்புக்குள் அடைத்து வைத்து கொடூரத் தாக்குதலை நடத்தியது.

கொத்து குண்டுகளில் தொடங்கி, இரசாயன குண்டுகள் வரை தடை செய்யப்பட்ட அனைத்து வகையான பேரழிவு ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. அதேபோல், பள்ளிகளில் தொடங்கி மருத்துவமனைகள் வரை அனைத்து வகையான பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீதும் சிங்களப்படையினர் விமானங்கள் மூலமும், பீரங்கிகள் மூலமும் குண்டுகளை வீசித் தாக்கினர்.

ஈழத் தமிழினத்தை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்தப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மூன்றரை லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்தனர் என்பது ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் குழு விசாரணை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் 2010 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதும், ஜெர்மனியின் ப்ரேமன் நகரில் 2013-14ஆம் ஆண்டில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாய விசாரணையின் போது இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. உலக மனித உரிமை அமைப்புகள் மூலம் நடத்தப்பட்ட வேறுபல விசாரணைகளிலும் இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கம் அம்பலமானது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களையும், சர்வதேச மனிதநேய சட்டங்களையும் மீறிய இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த சில வாரங்களில் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை இந்தியாவும் அதன் நேச நாடுகளும் இணைந்து தோற்கடித்தன.

பின்னர் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற தீர்மானங்களை அமெரிக்கா கொண்டு வந்த போது, தமிழகத்திலிருந்து தரப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக அவற்றை இந்தியா ஆதரித்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே திரைமறைவு நடவடிக்கைகள் மூலம், அந்த தீர்மானங்களில் இருந்த ‘ஐ.நா. கண்காணிப்புடன் கூடிய விசாரணை’ என்ற வாசகத்தை, ‘இலங்கை அரசே சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்த வேண்டும்’ என மாற்றி நீர்த்து போகச் செய்தது.

இத்தகைய விசாரணையை நடத்த இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகள் அவகாசம் கொடுத்த பிறகும் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் இலங்கை மீதான் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவும் இதற்கான தீர்மானத்தை வரும் மார்ச் 3 முதல் 28 ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் கொண்டுவர ஆயத்தமாகிறது. அதேநேரத்தில் சீனா, ஜப்பான், பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கி தீர்மானத்தை வீழ்த்தப் போவதாக உறுதி ஏற்றுள்ளன.

இலங்கை அரசோ அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கும்படி ஒருபுறம் இந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டே, இன்னொரு புறம் தீர்மானத்தை ஆதரித்தால், இந்திய அமைதிப் படை இழைத்த கொடுமைகள் குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்துவோம் என்று மிரட்டுகிறது.

இலங்கையின் இந்த மிரட்டல் இந்தியாவுக்கு விடப்படும் சவால் ஆகும். இதை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்பதுடன், ஈழத்தமிழர்களைக் கொன்ற இலங்கை அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். இதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்:

1) இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர் என்று அறிவிக்க வேண்டும்.

2) இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாற்றுகள் குறித்து நேர்மையான, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா தனியாகவோஅல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்தோ கொண்டு வர வேண்டும். இது குறித்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

3) ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இடம் பெற்றுள்ள ஆசிய நாடுகளுடன் பேசி, அவற்றின் ஆதரவை இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பெற்றுத் தர வேண்டும்.

இலங்கைப் பிரச்னையில் ஆரம்பத்திலிருந்தே அந்நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வரும் மத்திய அரசு மேற்கண்ட நடவடிக்கைகளை தானாகவே மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பது அறியாமையாகவே இருக்கும்.

எனவே, இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் நெருக்கடி அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும், தங்களின் அரசியல் நிலைப்பாடுகளை மறந்து, ஒரே குழுவாக டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இக்கோரிக்கைகளை வலியுறுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Similar posts

Comments are closed.