புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்!- அஸ்வர் எம்.பி.

Written by vinni   // February 5, 2014   //

aswar-mp-muslimcnமுஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரேரணை கொண்டு வருபவர்கள் மேற்படி விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித பள்ளிவாசலில் இருந்து உலகிற்கு இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேகாலையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் :-

சுதந்திர அணியின் இனிமையை காணும் உரிமை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பூரணமாக உண்டு. நாம் இந்த நாட்டில் பிறந்தவர்கள், இந்த நாட்டு மண் எமக்கும் உரித்தானது எனவே ஏனையவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை முஸ்லிம்களும் பூரணமாக அனுபவிக்க வேண்டும். அந்த உரிமையை எந்த சக்தியும் தட்டிக்களிக்க முடியாது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் வடக்கிலிருந்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே இரவில் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஆணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும்.

முன்னர் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் வியாபாரம், விவசாயம் செய்ய முடியாது இருந்தனர். தற்போது அந்த நிலை மாற்றம் அடைந்துள்ளது. நவீன வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்புக்கு வந்து வியாபாரம் செய்கின்றனர் இவற்றை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சுதந்திரம் இருந்தால்தான் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட முடியும், பாங்கு ஒலிக்க முடியும். கல்வி கற்க முடியும். எனவே நாம் பிறந்த நாடு இது. நாமே இதனை பாதுகாக்க வேண்டும் என்றார்.


Comments are closed.