கலை வடிவம் பெறும் சச்சினின் சாதனைகள்

Written by vinni   // February 4, 2014   //

sachinஇந்தியக் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

தனது சொந்த ஊரான மும்பையில் 200-வது டெஸ்ட் போட்டியுடன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்திய அரசு அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அவருக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்த விருதினை இந்திய அரசு சச்சினுக்கு இன்று அளிக்கவுள்ளது. இந்த நேரத்தில் நாசிக்கைச் சேர்ந்த ஓவியரான பிரபுல் சாவந்த் சச்சினின் வாழ்க்கை வரலாற்று ஓவியம் ஒன்றினை வரைந்துள்ளார்.

சச்சினின் சாதனைகளால் கவரப்பட்ட பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் தற்போது ஈடுபாடு கொண்டுள்ளனர். மூன்றடிக்கு ஐந்தடி கொண்ட இந்த ஓவியமானது அவரது வாழ்க்கையின் பல நிகழ்வுகளைப் பற்றி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சச்சினின் பிறந்த ஊர் மும்பை என்பதால் ஓவியத்தின் பின்னணியாக அந்நகரின் உலக பாரம்பரிய வரலாற்றுத்தளமாக அறிவிக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் இடம் பெற்றுள்ளது.

சச்சினின் குழந்தைப் பருவத்தில் தொடங்கி அவரது தந்தை ரமேஷ் டெண்டுல்கர், பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேனுடனான சச்சினின் சந்திப்பு, சச்சினின் 200-வது போட்டியில் இந்திய அரசு வெளியிட்ட அவரது தபால்தலை போன்றவை இந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி சச்சினின் தாயார், அவரது மனைவி அஞ்சலி, சச்சினை எட்டாவது உலக அதிசயமாகக் குறிப்பிடும் விதத்தில் தாஜ்மஹாலின் வெளித்தோற்றம் போன்றவையும் இந்த ஓவியத்தில் இடம் பெற்றுள்ளன.

கடந்த மூன்று மாதங்களாக இந்த ஓவியத்தை உருவாக்கிவரும் சாவந்த் விரைவில் இதனை சச்சினுக்குப் பரிசளிக்க உள்ளதாகப் பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.