வேலைவாய்ப்பிலும், வேலைக்கான ஊதியத்திலும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் – பராக் ஒபாமா

Written by vinni   // January 29, 2014   //

obamaஅமெரிக்க நாடாளுமன்றத்தில் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க பொருளாதார மேம்பாடு, வெளியுறவு கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்து உரையாற்றினார்.

அப்போது அவரது தலைமையிலான அமெரிக்க அரசின் சாதனைகளை பட்டியலிட்ட ஒபாமா, அரசின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கிப் பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசிய அவரது உரையின் சில துளிகள்:-

நமது அரசின் தொடர் அர்ப்பணிப்பால் உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடிவந்த தீவிரவாத செயல்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். நமது ராஜதந்திர அணுகுமுறையால் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை முழுஅளவில் தடுத்து நிறுத்தி, உற்பத்தி செய்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதங்களை அழிக்கும் முயற்சியையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம்.

அன்னிய நாடுகள் முதலீடு செய்ய ஏற்ற நாடுகளில் முதலிடம் வகித்த சீனாவை பின்னுக்குத் தள்ளி தற்போது அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. வெளிநாட்டினரின் முதலீடுகளை பெறுவதிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2014ல் நமது பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பெறும்.

அமெரிக்காவின் பற்றாக்குறை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத 1.6 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதில்லை; சமூக பாதுகாப்பிற்கு இது சரியானதல்ல. ஓய்விற்கு பின் புதிய சேமிப்பு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வரும். இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆயுதம் தாங்கிய வன்முறைக்கு எதிராக ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் செயல்பட வேண்டும்.

வேலைவாய்ப்பிலும், வேலைக்கான ஊதியத்திலும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் வழங்கப்படும். நமது நாட்டின் வேலைத்திறனில் பெண்களின் பங்களிப்பு சரிபாதியாக உள்ளது.

இருப்பினும், ஒரே வகையிலான வேலைக்கு ஆணுக்கு 100 சதவீத சம்பளமும், பெண்ணுக்கு 77 சதவீத சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவறானது. சமமான வேலை செய்யும் பெண்ணுக்கு சமமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.

தனது வேலையை தியாகம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வெண்டும். பழைய காலத்து பணி இட கொள்கைகளுக்கு விடையளிக்க நேரம் வந்துவிட்டதாக நாம் கருத வேண்டும். இந்த ஆண்டில் இருந்து வெள்ளை மாளிகை, வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம வேலைவாய்ப்பையையும், உழைப்புக்கேற்ற சம ஊதியத்தையும் வழங்க ஒன்றுபட வேண்டும்.

ஏனெனில், பெண்கள் வெற்றி பெற்றால் அமெரிக்கா வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு ஒபாமா பேசி முடித்ததும் அரங்கில் அமர்ந்திருந்த ஆண்களும், பெண்களும் எழுந்து நின்று ஒபாமாவை பாராட்டும் வகையில் சில நிமிடங்கள் வரை கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.