2800 கோடி அமெரிக்க டாலர்களை நேரடி அன்னிய முதலீடு : இந்தியா சாதனை

Written by vinni   // January 29, 2014   //

images (1)கடந்த (2013) ஆண்டில் மட்டும் வெளிநாட்டினரிடமிருந்து 28 பில்லியன் (2 ஆயிரத்து 800 கோடி) அமெரிக்க டாலர்களை நேரடி அன்னிய முதலீடாக ஈர்த்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய (2012) ஆண்டில் பெறப்பட்ட நேரடி அன்னிய முதலீட்டைவிட இது 17 சதவீதம் அதிகமாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியடைந்த 20 அதிமுக்கிய நாடுகளின் பட்டியலில் 28 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடிக்கு சமமான கணிதவியல் குறியீடாகும்) அமெரிக்க டாலர்களை வெளிநாட்டினரிடமிருந்து நேரடி அன்னிய முதலீடாக பெற்றுள்ள இந்தியா 16-வது இடத்தில் உள்ளதாகவும் ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு துறையின் இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் பெற்ற நேரடி அன்னிய முதலீடு 2012-ம் ஆண்டைவிட கடும் சரிவை சந்தித்து 39 சதவீதம் குறைந்துள்ளதும், அதற்கு நேர்மாறாக, முன்னேறிவரும் நாடுகளில் குவிந்த நேரடி அன்னிய முதலீடு 52 சதவீத வளர்ச்சியடைந்து 759 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிய வருகிறது.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் கடந்த ஆண்டில் மட்டும் 12 சதவீத உயர்வுடன் 576 பில்லியன் அமெரிக்க டாலர்களை நேரடி அன்னிய முதலீடாக பெற்றுள்ளன. ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் முன்னிலை வகித்து வரும் அதே வேளையில், அமெரிக்கா 159 பில்லியன் டாலர்களை மட்டுமே நேரடி அன்னிய முதலீடாக பெற்று பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை சீரடைந்த பின்னர், அனைத்து நாடுகளில் செய்யப்பட்டு வரும் நேரடி அன்னிய முதலீடுகள் வெகுவாக உயர்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.