பெடரர் சாதனையை நடால் முறியடிப்பார்: பீட் சாம்ராஸ் நம்பிக்கை

Written by vinni   // January 28, 2014   //

63db2687-15df-457e-b5ff-16ddcbd07db5_S_secvpfடென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்சிலாம் போட்டியாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிராஞ்ச் ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனை வீரராக உள்ளார். அவர் 17 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்தப் படியாக சாம்ராஸ் (அமெரிக்கா) 14 பட்டம் பெற்று 2–வது இடத்தில் உள்ளார். அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். உலகின் நம்பர் ஒன் வீரரான ரபெல்நடால் (ஸ்பெயின்) 13 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று 3–வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை நடால் வென்று சாம்ராசை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட முடியாமல் வாவ்ரிங்காவிடம் தோற்றார்.

இந்த நிலையில் பெடரரின் சாதனையை நடால் முறியடிப்பார் என்று பீட்சாம்ராஸ் தெரிவித்துள்ளார். டென்னிஸ் சகாப்தங்களில் ஒருவரான அவர் இது தொடர்பாக கூறியதாவது:–

நடாலின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் பிரமிப்பாக இருக்கிறது. அவர் பந்தை திருப்பி அனுப்பும் விதம் அபாரமாக உள்ளது.

இதுமாதிரி நான் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் நல்ல நிலையில் உள்ளார். பெடரரின் 17 கிராண்ட்சிலாம் பட்ட சாதனையை நடால் முறியடிப்பார்.

பெடரர் இனி 5 செட் ஆட்டத்தில் நடாலை தோற்கடிக்க முடியாது என்றே கருதுகிறேன். வாவ்ரிங்கா தான் அவருக்கு சவாலாக இருப்பார்.

இவ்வாறு சாம்ராஸ் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.