இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி

Written by vinni   // January 28, 2014   //

india-vs-nz-live-streaming-2014இந்தியா– நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் இன்று நடந்தது.  இந்திய அணி கேப்டன் டோனி இந்த முறையும் ‘டாஸ்’ வென்றார்.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா, 79 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி 79 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணியின் ஆட்டக்காரர்களாக குப்திலும் ரைய்டரும் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். புவனேஸ்வர் குமார் வீசிய முதலாவது ஓவரில் குப்தில் 2 பவுண்டரிகளை விளாசினர். முகமது சமி வீசிய இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து இந்திய பவுலர்களை திணறடித்தனர்.

7 ஓவர்களின் முடிவிலேயே 54 ரன்கள் அடித்தனர். இந்நிலையில் ரைடரின் அதிரடிக்கு ஆரோன் முடிவு கட்டினார். 19 ரன்கள் எடுத்த நிலையில் அவர் நடையைக் கட்டினார். அவரை தொடர்ந்து முகமது சமி ஓவரில் குப்தில் அவுட் ஆகினார். பின்னர் இணைந்த வில்லியம்சன் மற்றும் டெய்லர் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விரட்டி ஸ்கோரை உயர்த்தினர்.

டெய்லர் 62 பந்துகளிலும், வில்லியம்சன் 67 பந்துகளிலும் அரை சதம் கடந்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஆனால் வில்லியம்சன் 60 ரன்னைத் தொட்டபோது, துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 130 ரன்கள் சேர்த்து நியூசிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.

அடுத்து டெய்லருடன் மெக்கல்லம் இணைந்தார். இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த இருவரும் நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். தொடர்ந்து அசத்தலாக ஆடிய டெய்லர் 110 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். மெக்கல்லம் தனது பங்குக்கு பவுண்டரிகளாக பறக்க விட்டார். இறுதியாக 49-வது ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் அசத்தலான சிக்சரை பறக்க விட்டு ஆட்டத்திற்கு முடிவு கட்டினார்.

இதனால் 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 280 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றியை ருசித்தது. டெய்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5-வது ஒருநாள் போட்டி சம்பிரதாயமான ஆட்டமாக 31-ந்தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.

அதேசமயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி மீண்டும் 2-ம் இடத்திற்குச் சென்றது.


Similar posts

Comments are closed.